சென்னை: சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை, உயர்தர தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் இதயவியல், நரம்பியல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சிறப்பு துறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் இதயவியல் துறை தமிழகத்திலேயே அதிநவீன வசதிகள் கொண்ட துறையாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதயவியல் பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதி தீவிர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, ஆண்கள், பெண்கள் என தனித்தனி பிரிவுகள் என மொத்தம் 150 படுக்கைகள் கொண்ட உயர்தர பிரிவாக செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு தென் சென்னையை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் பொதுமக்கள் தினமும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் இதயவியல் துறை தனியாக தொடங்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 6 மாதங்களில் மட்டும் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுகுறித்து இதயவியல் துறை தலைவர் டாக்டர் தர்மராஜ் கூறுகையில், ‘‘இதயவியல் துறை தொடங்கிய 6 மாதத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த 6 மாதத்தில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்ததோடு, இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு உள்ள 1000க்கும் அதிகமான இதயவியல் நோயாளிகளுக்கு ஆஞ்சியோ, ஆஞ்சியோ பிளாஸ்டி, பேஸ் மேக்கர் கருவி பொருத்தி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதன் மதிப்பு மொத்தம் ரூ.40 கோடி வரை ஆகும். ஆனால், முழுவதுமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமே செய்யப்பட்டுள்ளது.
இதனால் நோயாளிகளின் சிரமம் பெரிதும் தவிர்க்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியோடு வீட்டிற்கு செல்கின்றனர்,’’ என்றார். இதுகுறித்து சிகிச்சை பெற்று வீடுதிரும்பியவர்கள் கூறுகையில், ‘‘தனியார் மருத்துவமனைக்கு சென்றால் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை செலவாகியிருக்கும். ஆனால் அரசு மருத்துவமனையில் ஒரு ரூபாய் செலவில்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள் சிறப்பாக, அன்பாக கவனித்து சிகிச்சை அளிக்கின்றனர். அரசு மருத்துவமனையில் இது போன்று உயர்தர சிகிச்சை வழங்கி வரும் தமிழக அரசு, முதல்வருக்கு மிக்க நன்றி,’’ என்றனர்.