போபால்: மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் பிளஸ் 2 மாணவியை கழுத்தறுத்து கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.மத்தியப் பிரதேச மாநிலம், நரசிங்பூரை சேர்ந்த ஹிராலால் சவுத்திரி மகள் சந்தியா (19). இவர் பிளஸ் 2 படித்து வந்தார். ஜூன் 27 அன்று அவர் தனது நண்பரின் உறவினரைப் பார்ப்பதற்காக அரசு மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
மருத்துவமனைக்குள் வந்த அவரை பின்தொடர்ந்து, அவரை காதலித்த அபிஷேக் என்ற வாலிபர் வந்தார். மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்த அபிஷேக், அறை எண் 22-க்கு வெளியே சந்தியாவிடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு அருகே நின்றிருந்த அபிஷேக், பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் முன்னிலையில் சந்தியாவை ஓங்கி அறைந்தார்.
பின்னர் அவரை தரையில் தள்ளிவிட்டு, அவரது மார்பின் மீது அமர்ந்து கூர்மையான கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டு ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் எனப் பலர் அங்கிருந்தும், ஒருவர்கூட கொலையாளியைத் தடுக்க முன்வரவில்லை. சுமார் 10 நிமிடங்கள் இந்த கொடூரம் நிகழ்ந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சந்தியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடூரக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சந்தியாவைக் கொலை செய்த பிறகு, கொலையாளி அபிஷேக் தனது கழுத்தையும் அறுக்க முயன்றார். பின்னர் மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார். இதை தொடர்ந்து அபிஷேக்கை போலீசார் கைது செய்தனர். நர்சிங்பூர் எஸ்பி மிருகாகி தேகா கூறுகையில்,’ சமூக ஊடகம் மூலம் சந்தியாவும், அபிஷேக்கும் பழகி வந்தனர். கடந்த ஜனவரி முதல் சந்தியாவுக்கு வேறு ஒரு தொடர்பு இருப்பதாக அபிஷேக் சந்தேகித்ததால் இந்த கொலை நடந்துள்ளது’ என்றார்.