சென்னை: தலைவலிக்காக செய்த அறுவை சிகிச்சையால் கண்பார்வை இழந்த இளம்பெண், கலெக்டரிடம் உதவி கேட்டு மனு கொடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் அடுத்த வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருக்கு பார்வதி என்ற மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மஹாலட்சுமி, சுமித்ரா ஆகிய இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது.
இதில் மூன்றாவது மகளான நிவேதா(19) கடந்த 2019 ம் ஆண்டு 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது நிவேதாவிற்கு அடிக்கடி தீராத தலைவலி வந்த வண்ணம் இருந்துள்ளது. இந்நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் நிவேதாவிற்கு கடந்த 2019ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போதே மருத்துவமனை தரப்பில் நிவேதாவின் கண் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைக்கு பிறகு கண்பார்வை வரலாம் வராமலும் போகலாம். அதற்கு நீங்கள் ஒப்புதல் கொடுத்தால் அறுவை சிகிச்சை செய்யலாம் என நிவேதா மற்றும் அவரது பெற்றோரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே சிகிச்சை அளித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு நிவேதாவின் கண்பார்வை முழுமையாக பாதிக்கப்பட்டது. கண்பார்வை முழுமையாக பாதிக்கப்பட்ட பிறகும் சோர்ந்து போகாத நிவேதா பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ.ஆங்கில பட்டப்படிப்பும் முடித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய நிலைமையை எடுத்துச்சொல்லி தனக்கு அரசு தரப்பில் உதவி செய்ய வேண்டும் என்று நிவேதா தனது தாயுடன் வந்து செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.