மின்சார மோட்டாரிலிருந்து நாம் பெறக்கூடிய சக்தியின் அளவை குதிரைத்திறன் என்ற அலகால் குறிப்பிடுவது வழக்கம். இதைச் சுருக்கமாக ஹெச்.பி (HP) என்றும் கூறப்படும். குதிரைத்திறன் என்ற வார்த்தை பிரயோகத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ்வாட் என்ற விஞ்ஞானிதான். இவர் வேறு யாருமல்ல நீராவி எஞ்ஜினைக் கண்டுபிடித்த பொறியாளர்தான். இவர் உருவாக்கிய நீராவி இயந்திரம் எந்த அளவுக்கு பொருட்களை இழுத்துக் கொண்டு எவ்வளவு வேகத்தில் செல்லும் என்பதை நிரூபிக்க, எஞ்ஜினின் செயல் திறனை அளவிட வேண்டியிருந்தது. அந்த காலங்களில் சாரட் வண்டிகளில் குதிரைகள் பூட்டப்பட்டு இயக்கப்பட்டன. சாரட்டுக்கு மாற்றாக வந்த ஆட்டோமொபைல் வாகனங்களின் செயல்திறனை கணக்கிட குதிரையின் வேகத்தை அளவிட அவர் முடிவு செய்தார். நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரியை மேலே இழுத்து வருவதற்கு குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. அதைக் கருத்தில் கொண்டு 149 கிலோ எடையை சுமந்துகொண்டு 100 அடி தூரத்தை ஒரு நிமிடத்தில் கடப்பதை ஒரு குதிரைத் திறன் (1 ஹெச்.பி.) என அவர் கணக்கிட்டார். பின்னர் அதுவே அறிவியல்பூர்வமான கணக்கீடாக மாறி சுருக்கமாக ஹெச்.பி (குதிரை திறன்) என்றானது.
பொதுவாக மின்னியக்கி போன்றவற்றின் திறனை அளக்கவும், தானுந்து, பேருந்து, மகிழுந்து போன்ற உந்து இயந்திரங்களின் திறனையும் அளக்க குதிரைத்திறன் என்ற அலகு பயன்படுகின்றது. 1 HP என்பது 746 வாட்டுகள் (0.746 கிலோ வாட்டுகள் (KW)) என்ற மின்திறன் அளவிற்குச் சமம். சில மோட்டார்களில் ஹெச்.பி அளவு குறிப்பிடப்படாமல் கிலோவாட்டுகள் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு நீரேற்றி (பம்பு மோட்டார்) 0.75 கிலோவாட்டுகள் (KW) எனில் அது ஒரு குதிரைத்திறனுக்குச் (1HP) சமம் ஆகும்.சிறிய அளவில் இருந்து மிகப் பெரிய அளவு வரை பல அளவுகளில் ஒன்றுக்கு குறைவான ஹெச்.பி முதல் ஆயிரக்கணக்கான ஹெச்.பி வரையுள்ள மோட்டார்களும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்றும் ஒன்றுக்கு குறைவான ஹெச்.பியும் உடைய மோட்டார்களுக்கு ‘பின்ன அளவு குதிரைத்திறன் மோட்டார்’ (Fractional Motor) என்று பெயர். ஒன்றுக்கு குறைவான எண்களை பின்னம் (Fraction) என்று சொல்வதால் இப்பெயர் வழக்கத்தில் உள்ளது. மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ், ஏசி, வீட்டுக் கிணற்றில் அமைக்கப்படும் பம்ப் மோட்டார்கள் போன்றவைகளில் ‘பின்ன குதிரை சக்தி மோட்டார்’ (Fractional Motor) தான் இருக்குமென்றாலும் தேவையைப் பொறுத்து அவை வெவ்வேறு வகையைச் சேர்ந்ததாக இருக்கும்.ஒரு 5 கெச்.பி (HP) மோட்டார் எவ்வளவு பவரை எடுக்கும் என்பதை கணக்கிட 5×746 ஐ பெருக்கக் கிடைக்கும் 3730 வாட்ஸ் (Watts) மதிப்பு தான் 5 ஹெச்.பி மோட்டாரின் பவர் ஆகும். இதை கிலோ வாட்ஸில் (KW) பெறவேண்டும் என்றால் 1000ல் வகுக்க வேண்டும் (3730/1000) வகுத்துக் கிடைக்கும் மதிப்பு 3.73 கிலோ வாட்ஸ் (KW) ஆகும்.