ஷில்லாங்: மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்ற இடத்தில் கணவரை ஆள்வைத்து கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காதலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேசத்தை சேர்ந்தவர் ராஜா ரகுவன்சி. மே மாதம் 11ம் தேதி இவருக்கும் சோனம் என்பவருக்கும் திருமணம் நடந்தது. புதிதாக திருமணமான தம்பதி ஹனிமூன் செல்வதற்கு திட்டமிட்டனர். முதலில் அசாமில் உள்ள காமக்யா கோயிலுக்கு செல்வதற்கு தம்பதியினர் முடிவு செய்து ஏற்பாடுகளை செய்தனர். மே மாதம் 20ம் தேதி புறப்பட்ட தம்பதியினர் அசாம் செல்லாமல் மேகாலயாவின் ஷில்லாங் சென்றுள்ளனர். மே 22ம் தேதி இருவரும் மேகாலயாவின் மவ்லாகிபாத் கிராமத்திற்கு வந்து விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். மேலும் ஸ்கூட்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
மே 23ம் தேதி விடுதி அறையை காலி செய்துவிட்டு காலை உணவையும் தவிர்த்து 6 மணிக்கு அங்கிருந்து இருவரும் வெளியேறி உள்ளனர். அதன் பின்னர் இருவரையும் காணவில்லை என்று தெரிகிறது. குடும்பத்தினர் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால் இது குறித்து ராஜாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர். தம்பதியினர் மாயமானது குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி ராஜாவின் சடலம் நீர்வீழ்ச்சி அருகே 3000 அடி பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் அவர் அணிந்திருந்த தங்க மோதிரம், செயின் உள்ளிட்டவை காணாமல் போயிருந்தது. ரத்தக்கறைகளுடன் அவரது மழைகோட் மற்றும் புதிய கத்தி கண்டறியப்பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே அவர்கள் வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டர் கேட்பாரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ராஜாவின் மனைவி சோனம் என்ன ஆனார் என்பது குறித்த விவரங்கள் தெரியாத நிலையில் அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்தது. போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் சோனம் குறித்த எந்த தகவல்களும் தெரியவில்லை. மத்திய பிரதேசம் மற்றும் மேகாலயா மாநிலங்கள் இடையே நடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுப்பெண் சோனத்தை கண்டுபிடிக்க முடியாததும் போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மேகாலயாவில் இருந்து 1200 கிமீ தொலைவில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூரில் உள்ள தாபாவிற்கு சென்ற சோனம், அங்கிருந்து தாபா உரிமையாளர் செல்போன் மூலம் தனது சகோதரரை தொடர்பு கொண்டார். அவரது அறிவுறுத்தல் பேரில் நந்கஞ்ச் காவல்நிலையத்தில் சோனம் சரண் அடைந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இதே நேரத்தில் போலீசார் மேலும் 4 பேரை கைது செய்துள்ளனர். 2 பேர் மபியை சேர்ந்தவர்கள், 2 பேர் உபியை சேர்ந்தவர்கள். உபி லலித்பூரை சேர்ந்த 19 வயது வாலிபர் ஆகாஷ் ராஜ்புத் முதலில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கணவர் ராஜா ரகுவன்ஷியை புதுப்பெண் சோனம் தான் கூலிப்படையை ஏவி கொலை செய்ததும், இதற்கு அவரது காதலன் ராஜ்சிங் குஷ்வாகா துணையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அதிரடியாக மபி மாநிலம் இந்தூரை சேர்ந்த 22 வயது வாலிபர் விஷால் சிங் சவுகான், காதலன் ராஜ்சிங் குஷ்வாகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையிலும் சோனம், ராஜ்சிங் குஷ்வாகா காதலால் தான் இந்த கொலை நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கு உதவிய மபி சாகர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது வாலிபர் ஆனந்த் குர்மி என்பரை நேற்று மதியம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட புதுப்பெண் சோனம் உள்பட அனைவரையும் மேகாலயாவிற்கு கொண்டு வந்து விசாரிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த கொலையை கூலிப்படையை ஏவி புதுப்பெண் சோனம் கொலை செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.