தென்னாப்ரிக்காவில் பிரிட்டோரியா மாகாணத்தில் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கி கடந்த 8ம் தேதி வரை நடைபெற்ற 5வது உலகக்கோப்பை வளையப்பந்து போட்டியில் இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய அணிக்காக 18 பேர் தேர்வாகி சென்றதில் தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிரமத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் முரளி தலைமையில் கல்லூரி மாணவர்கள் சுகிவர்மன், அபினேஷ் மற்றும் அஞ்சல் ஊழியர் அறிவழகன் ஆகியோர் விளையாடினர். சுகிவர்மன் ஜூனியர் இரட்டையர் பிரிவில் ஒரு தங்கம், ஜூனியர் பிரிவில் ஒரு தங்கம் என இரண்டு தங்கப்பதக்கங்களும், சீனியர் பிரிவில் அபினேஷ் மற்றும் அறிவழகன் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
தென்னாப்ரிக்கா சென்று பதக்கங்களை வென்று திரும்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வாணியம்பாடி ரயில் நிலையத்தில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பயிற்சியாளர் முரளி கூறுகையில், ‘‘வாணியம்பாடி வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தென்னாப்ரிக்காவில் பிரிட்டோரியா மாகாணத்தில் நடைபெற்ற 5வது உலகக்கோப்பை வளையப்பந்து போட்டியில் பங்கேற்று வெற்றி வாகை சூடி தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதுபோன்ற போட்டிகளில் பங்குபெற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் எங்களைப் போன்ற ஏழ்மையான விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி, ஊக்கத்தொகை வழங்கி உதவ வேண்டும். மேலும் எங்களுக்குப் பயிற்சி மேற்கொள்ளப் போதிய விளையாட்டு மைதானங்கள் கிடையாது. அதற்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார்.