Wednesday, June 18, 2025
Home மருத்துவம்இயற்கை உணவு தேன்… தேன்… தித்திக்கும் தேன்!

தேன்… தேன்… தித்திக்கும் தேன்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

ஒரு டீடெய்ல் ரிப்போர்ட்

உணவியல் நிபுணர் பா. வண்டார்குழலி

தேனுக்கும் மனிதனுக்குமான தொடர்பு காலத்தைக் கடந்தது என்பதையும், தென்கிழக்கு ஆசியாவில் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தேனீக்கள் இருந்திருக்கின்றன என்பதையும், ஸ்பெயின் நாட்டின் வவென்சியா குகைகளில் இருக்கும் ஓவியங்கள் உறுதிப்படுத்துகின்றன.

கி.மு. 2100 – 2000 காலத்திலேயே தேன் உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகளாக, பண்டைய எகிப்தியர்கள், பறவைகள், ஈக்கள், பன்றியின் ரத்தம் போன்றவற்றுடன் தேனைக் கலந்து சாப்பிடுவதுடன், குருட்டுத்தன்மை, வலி, வீக்கம் போன்றவற்றிற்கு மருந்தாகவும் தேனைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற வரலாற்றுக் குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. தொழிற்சாலைகளில், கரும்பிலிருந்து சர்க்கரை என்ற இனிப்புப் பொருள் பிரித்தெடுக்கப்பட்டு நடைமுறைக்கு வருவதற்கு முன்புவரை தேன் மட்டுமே இனிப்பு சுவைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

தேன் உருவாக்கம் மற்றும் உற்பத்தி

பூக்களில் இருக்கும் கொழகொழப்பான இனிப்பு திரவத்தை (Nectar) தேனீக்கள் சேகரித்துத் தேனாக மாற்றுகின்றன. தேனிலிருக்கும் அடர்த்தியான சர்க்கரையை, தேனீக்கள் தங்களது எச்சிலில் இருக்கும் இன்வர்டேஸ், அமைலேஸ் மற்றும் குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் போன்ற என்சைம்களின் உதவியால் எளிமையான குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸாக மாற்றுகின்றன.

அதைத் தொடர்ந்து, தேனீக்கள் ஒரு நொடிக்கு சுமார் 190 – 250 முறைகள் தனது இறக்கையை வேகமாக அசைத்து அடிப்பதன் மூலம் ஏற்படும் காற்றின் உதவியால், தேனில் இருக்கும் நீரை உலர வைத்து மேலும் அடர்த்தியான திரவமாக மாற்றுகின்றன. பூக்களில் இருந்து பெறப்படும் உண்மையான, தரமான, அடர்த்தியான தேனில் 18 சதவிகிதத்திற்கும் கீழ் ஈரத்தன்மை இருப்பதால், எளிதில் கிருமிகள் வராது என்பதுடன், தரமான தேன் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. ஆனால், உண்மையான தேனுடன் நீர், சர்க்கரைப் பாகு அல்லது பிற இனிப்புத் திரவங்கள் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படும்போது, அந்தத் தேன் விரைவில் கெட்டுவிடும்.

உலகளவில் தேனின் உற்பத்தி அளவு 1.89 மில்லியன் மெட்ரிக் டன் ஆக இருக்கும் நிலையில், சீனா, 2024 -2025 வருடத்தில் 461,900 டன் தேன் உற்பத்தி செய்து முதலிடத்தில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, துருக்கி, ஈரான், இந்தியா தேன் உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றன. இருப்பினும், தரத்தின் அடிப்படையில், உலகின் முதல் தர தேன் என்பது, நியூஸிலாந்து நகரிலுள்ள மனுகா என்ற மரங்களின் பூக்களிலிருந்து பெறப்படும் “மனுகா தேன்” என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து, ஏமன் நாட்டின் ‘சிடர் தேன்’, ஹங்கேரி நாட்டின் ‘அகேசியா தேன்’ துருக்கி நாட்டின் ‘எல்விஷ் தேன்’ போன்றவை தரவரிசைப் பட்டியலில் பிரபலமாக இருக்கின்றன. இந்தியாவைப் பொருத்த வரையில் டாபர், சபோலா, பாரத் போன்ற நிறுவனங்களின் தேனை, ஐக்கிய நாடுகள், சவுதி அரேபியா, எமிரேட்ஸ், பங்களாதேஷ், கனடா போன்ற நாடுகள் விரும்பி இறக்குமதி செய்து கொள்கின்றன.

தேனின் வகைகள்

தேன் வேண்டும் என்று கடைகளில் கேட்டால், ஒரு பாட்டிலில் இருக்கும் தேன் கொடுப்பார்கள். அதைக் கடந்து, தேன் வகை என்றால், மலைத் தேன், கொம்புத் தேன் என்பது மட்டும்தான் நமக்குத் தெரியும். உண்மையில் தேனில் மொத்தம் 300 வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை, மணம், உடலியல் சார்ந்த நன்மைகளைப் பெற்றிருக்கிறது. மட்டுமின்றி, உற்பத்தி செய்யும் தாவரத்தைப் பொருத்தும்; தேன் வகைப்படுத்தப்படுகிறது. தேனைப் பக்குவப்படுத்தி விற்பனை செய்யும் முறைகளைப் பொருத்தும் தேன் வகைப்படுத்தப்படுகிறது.

தேன் ஒரு சர்க்கரை என்பதால், 70 – 110 டிகிரி வெப்பநிலையில் அடர்திட நிலையை அடைந்து படிகமாக மாறும். இம்முறையில் தேனை சிறு படிகங்களாக மாற்றி crystalized தேன் என்றும், 72 டிகிரி வெப்பநிலையில் பக்குவப்படுத்தி ‘பாஸ்டியரைஸ்டு தேன்’ என்றும் விற்பனை செய்கிறார்கள். தேனை அதிக நேரம் வெப்பப்படுத்தினால், அதிலிருக்கும் நுண் பொருட்கள் அழிந்து போவதுடன், தேனின் நிறம், மணம், சுவையும் மாறிவிடுகிறது. இதுமட்டுமல்லாமல், ஒலி அலைகளைப் பயன்படுத்தி வடிகட்டப்பட்ட தேன் ‘ultrasonicated தேன்’ என்றும் பெரிய நுரைகள் போன்று மென்மையாக மாற்றப்பட்டு ‘creamed தேன்’ என்றும், நீர் ஆவியாக்கப்பட்டு ‘உலர் தேன்” என்றும் கொதிக்க வைத்து வடிகட்டி ‘தேன் டீகாஷன்’ என்றும் வகை வகையாக விற்பனை செய்யப்படுகின்றது.

தேனில் இருக்கும் சத்துக்கள்

தேனில் இருக்கும் பிரதானமான சர்க்கரையில் ஒற்றை மூலக்கூறு சர்க்கரைகளான (மோனோசாக்கரைட்) பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் அதிகமாக இருக்கும். இவையல்லாமல் ஏறக்குறைய 25 வகையான ஆலிகோசாக்கரைட் சர்க்கரை வகைகளுடன், அமினோ அமிலங்கள், இன்வர்டேஸ், அமைலேஸ், குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் போன்ற என்சைம்களும் உள்ளன. குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் உற்பத்தி செய்யும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு, வாயில் உருவாகும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் பணி புரிந்து, வாய் ஆரோக்கியத்தைக் காப்பதற்கும், தேனின் மருத்துவ குணத்திற்கும் முக்கியப் பொருளாக இருக்கிறது. இவற்றுடன், மிகக் குறைந்த அளவே உடலுக்குத் தேவைப்படும் தாதுக்களான குரோமியம், மாங்கனீசு, செலினியம், சல்பர், போரான், கோபால்ட், அயோடின், சிலிக்கான் போன்றவையும் தேனில் உள்ளன.

செல்களின் உயிர் வேதிவினைகளைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தைக் காக்கவும், மூளையின் நரம்பு மண்டலத்தின் சமிக்ஞைகளைக் கடத்தவும் மிக உதவியாக இருக்கும் கோலின், அசிட்டைல் கோலின் போன்ற வேதிப்பொருட்களும் தேனிலிருந்து உடலுக்குக் கிடைக்கிறது. தேனில் அதிக சர்க்கரை இருந்தாலும், அதன் சுவை, மணம், தரம் போன்றவை அதிலிருக்கும் அமினோ அமிலங்களால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. பாலிபினால்கள் என்னும் நுண்பொருட்களுள், குவார்சடின், அபிஜெனின், கலான்ஜின் போன்றவை தேனில் இருக்கின்றன. வெப்பம் அதிகமுள்ள வேனிற் காலத்தில் சேகரிக்கப்படும் தேனின் சுவை அதிகமாக இருப்பதுடன் பினால்களின் அளவும் ஒரு கிலோ தேனிற்கு 56 – 5000 மி.கிராம் வரையில் அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தேன் உணவும் உடற்பயிற்சியும்

தேநீர், காபி, பிற ஆரோக்கிய பானங்களில், சர்க்கரைக்குப் பதிலான இனிப்புப் பொருளாகத் தேன் பயன்படுத்தப்படுவதுடன், கேக், பிஸ்கட், குக்கீஸ் போன்ற பேக்கரி உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது. காலை உணவுப் பொருட்களான டோஸ்ட், பான்கேக் போன்றவற்றிலும் சேர்க்கப்படுகிறது. சுவையை அதிகரிப்பதற்காக இறைச்சி வகைகளில் கேராமல் என்னும் அடர்திரவப் படலம் உருவாக்க உதவுகிறது. பழச்சாறு, ஸ்மூத்தி, சாஸ் வகைகளில் சேர்க்கப்படுவதுடன், நறுக்கிய பழங்களில் ஏற்படும் என்சைம் நிறமாற்றத்தைத் தடுக்கவும் பயன்படுகிறது. உலர் நிலையை அடைந்துவிடும் பேக்கரி உணவுகளில், ஈரத்தன்மையை அல்லது மிருதுத் தன்மையை நீண்ட நேரம் தக்க வைப்பதற்கும் தேன் உதவுகிறது.

தேனுக்கும் உடற்பயிற்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சிக்குப்பிறகு ரத்த சர்க்கரை அளவு குறைவதை தேன் சாப்பிட்டு சரிசெய்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது என்பதால், உடற்பயிற்சியாளர்கள் தேனை அதிகம் விரும்புகிறார்கள். இவர்கள் தேனைத் திரவமாகவும், பவுடராகவும், ஜெல்லாகவும் பயன்படுத்துகின்ற நிலையில், அதற்கென்ற அளவீடுகளும் வைத்திருக்கிறார்கள். உடற்பயிற்சிக்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் சாப்பிட வேண்டுமென்றால், ஒருவரின் ஒரு கிலோ உடல் எடைக்கு 4 கிராம் போதுமானது என்று கூறப்படுகிறது. அதாவது, 60 கிலோ உடல் எடை இருப்பவர், 240 கிராம் தேன் சாப்பிடலாம்.

அதே போன்று, உடற்பயிற்சிக்கு 1 மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிலோ உடல் எடைக்கு 1 கிராம் தேனும், 10 நிமிடங்களுக்கு முன்னர் 0.5 கிராம் அளவும், உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை 30 -60 கிராம் அளவும் தேன் சாப்பிடலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், உடற்பயிற்சி முடிந்த பிறகு, அந்த சோர்விலிருந்து விடுபடுவதற்கு, 15 நிமிடத்திற்குள்ளாக ஒரு கிலோ உடல் எடைக்கு 1 கிராம் தேன் சாப்பிட வேண்டும். இதுபோல் அளவுகளில், தொடர்ச்சியாக 4 – 6 மாதங்கள் சாப்பிடலாம். தேனிலிருக்கும் 3 சதவிகித இனிப்பும் 1 சதவிகித புரதமும் உடற்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் மாற்றங்களுக்கும் ஏற்றதாக இருக்கிறது.

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் உணவாகப் பயன்படுவதைவிட அதிகமாக மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. வெளிப்புற சிகிச்சையில் தொற்று, அடிபட்ட காயங்கள், நாள்பட்ட புண்கள், நீரிழிவால் ஏற்படும் புண், தீக்காயம், வீக்கம், அழற்சி போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. உள்ளுக்குக் கொடுக்கும் மருந்தாக தேனின் பயன்பாடு அதிகம். சரியான தூக்கம் இல்லாதவர்கள், இரவில் உறங்கச் செல்லும் முன்பு, வெதுவெதுப்பான பால் அல்லது நீரில் தேன் கலந்து சாப்பிடலாம். சளித்தொல்லை, நெஞ்செரிச்சல், தொண்டை கரகரப்பிற்குத் தேனுடன், சிறிதளவு இஞ்சிச் சாறும் பனங்கற்கண்டும் சேர்த்து சாப்பிடலாம். பல் ஈறு நோய்க்கு தண்ணீரில் தேன் சேர்த்து வாய் கொப்பளிப்பதுடன், வெறும் வயிற்றில் தேன் சாப்பிட வயிற்றுப்புண், மலச்சிக்கல் மற்றும் செரிமான சிக்கல்கள் தீரும்.

காசநோய் இருப்பவர்கள் தேனுடன் ரோஜா இதழ் சேர்த்து சாப்பிட்டு வர குணம் கிடைக்கும். இதயம் பலவீனமாக இருப்பவர்கள் சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டே, தேனுடன் மாதுளம் பழச்சாறு சேர்த்து குடித்துவருவது நன்மை அளிக்கும். மாதவிடாய் வயிற்றுவலி நீங்குவதற்குத் தேனுடன் பெருங்காயம் சேர்த்து ஒரு நாளைக்கு 3 வேளைகள் சாப்பிட்டுவர குணம் கிடைக்கும். தேன், தயிர், பழச்சாறு சேர்த்து அரைத்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும். இத்தனை சிறப்புகள் தேனில் இருப்பதால், மாற்றுமுறை மருத்துவத்தில், apitherapy என்னும் தேன் மருத்துவம் இன்றளவும் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi