ஹோண்டா கார்ஸ் நிறுவனம், புதிய ஹோண்டா சிட்டி ஸ்போர்ட் லிமிடெட் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த 5ம் தலைமுறைக் காரில் 1.5 லிட்டர் ட4 சிலிண்டர் ஐ-விடெக் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றிருக்கும். புதிய வாகன உற்பத்தி விதிகளுக்கு ஏற்ப 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தும் வகையில் இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 119 பிஎச்பி பவரையும் 145 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். சிவிடி யூனிட், பேடில் ஷிப்டர்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18.4 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவனத் தரப்பில் கூறப்படுகிறது.
முன்புறம் கருப்பு நிற கிரில்கள், கருப்பு நிற டிரங்க் லிப் ஸ்பாய்லர்கள் மற்றும் ரியர் வியூ மிரர் ஆகியவை புதிய தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்போர்ட் பேட்ச் இடம் பெற்றுள்ளது. உட்புறமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா சென்சிங், குரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்ட அடாஸ் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.14.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹோண்டா சிட்டி சிவிடி வேரியண்ட்களில் வி மற்றும் விஎக்ஸ் ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக இது இருக்கும். லிமிடெட் எடிஷன் என்பதால் குறிப்பிட்ட அளவு மட்டுமே உற்பத்தி செய்யப்படும். எண்ணிக்கை விவரத்தை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.