வீட்டின் எந்த திசையில் கிணறு தோண்ட வேண்டும்?
– குமாரசுப்ரமணியன், திருவதிகை.
பொதுவாக ஒரு மனையின் வடகிழக்கு திசையில் கிணறு தோண்ட வேண்டும். அந்த திசையில் சௌகரியப்படாவிட்டால் வடக்குத் திசையில் தோண்டலாம். தற்காலத்தில் கிணறு தோண்டுவது வழக்கத்தில் இல்லாவிட்டாலும், போர் போடுதல் (ஆழ்துளைக் கிணறு) கீழ்நிலை நீர்தேக்கத்தொட்டி (சம்ப்) முதலானவற்றை அமைப்பதற்கும் இந்த திசைகளையே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் தென்கிழக்குத் திசை, மனையின் மையப்
பகுதி ஆகியவற்றில் இவற்றுக்கு அமைக்கக்கூடாது.
?சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கோயில்களில் உள்ள வன்னி மரத்தை சுற்றக் கூடாது என்கிறார்களே? விளக்கம் தேவை?
– டி.ரவி,சென்னை.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கோயில்களில் உள்ள வன்னிமரம் மட்டுமல்ல, வேறெந்த இடத்தில் உள்ள எந்த மரத்தையும் சுற்றக்கூடாது. பகல்பொழுதில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையின் போது மரங்கள் கார்பன்டை ஆக்ஸைடை உட்கொண்டு சுத்தமான ஆக்சிஜன் வாயுவை வெளியேற்றுகின்றன. சுத்தமான ஆக்சிஜன் வாயுவை நாம் சுவாசிக்கும் போது உடல் ஆரோக்கியம் பெறுகிறது. சூரிய அஸ்தமனத்திற்குப் பின் ஒளிச் சேர்க்கை நடைபெற வாய்ப்பு இல்லாததால், தாவரங்கள் ஆக்சிஜனை உட்கொண்டு கார்பன்டை ஆக்ஸைடு வாயுவினை வௌியேற்றுகின்றன. இதனை சுவாசிப்பதால் மனிதனின் உடல் ஆரோக்கியம் கெடும் என்பதால் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் மரங்களின் அடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என்கிறது அறிவியல். இந்த அடிப்படையில்தான் சூரிய அஸ்தமனத்திற்குப் பின், ஸ்தல விருட்சங்களை வலம்வந்து வணங்க வேண்டாம் என்கிறது ஆன்மிகம்.
?மந்திர, மாந்திரீக, தாந்திரீக, ஜோதிடத்தை ஓரிரு நாளில் கற்றுத் தருவதாக சொல்கிறார்களே… இதில் சேர்வது பலன் தருமா?
– மல்லிகா அன்பழகன், சென்னை.
நிச்சயமாகப் பலன் தராது. எந்த ஒரு கலையையும் ஓரிரு நாளில் கற்றுக் கொள்ள இயலாது. அதிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள கலைகளைக் கற்றுக் கொள்வதற்கு கடவுள் அருள் அவசியம் தேவை. இந்தக் கலைகளை எல்லோராலும் அத்தனை எளிதாகக் கற்றுக்கொள்ள இயலாது. பாரம்பரியம் மிக்க இந்த கலைகளை ஓரிரு நாட்களில் கற்றுத் தருவதாகச் சொல்வது ஏமாற்றும் காரியமே. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
?குலதெய்வம் வேறு இஷ்ட தெய்வம் வேறா?
– விஜய், சிவகங்கை.
ஆம்! சிலருக்கு பரம்பரையாக குலதெய்வம் என்று ஒன்று இருக்கும். இஷ்ட தெய்வம் அவரவர்கள் உளவியலுக்கும் ஈடுபாட்டிற்கும் ஏற்ப ஏற்படும். ஒருவருக்குப் பெருமாள் இஷ்ட தெய்வமாக இருந்தாலும், அதிலும் குறிப்பிட்ட பெருமாள் இஷ்ட தெய்வமாக இருப்பார். சிலருக்கு திருப்பதி பெருமாள். சிலருக்கு ரங்கம் பெருமாள். பொதுவாகவே குலதெய்வக் கோயிலுக்கு ஆண்டுக்கு இரண்டு முறையாவது செல்ல வேண்டும் என்பார்கள். அல்லது ஒரு முறை. இயலாவிட்டால் வீட்டில் விசேஷங்கள் நடப்பதற்கு முன் ஒரு முறை செல்ல வேண்டும். இஷ்ட தெய்வக் கோயிலுக்கு நினைத்த போதுசெல்லலாம்.
?இத்தனை விரதங்கள் தேவையா? மொத்த விரதத்தையும் கணக்கிட்டால் 365 நாட்களும் விரதங்கள் இருக்கும்போல் தெரிகிறது?
– ரமேஷ், கோவை.
ஒவ்வொரு விரதத்திற்கும் ஒவ்வொரு பின்னணி உண்டு. பலன் உண்டு அடுத்து இந்த உலகம் பல்வேறு ருசி உடையது உணவிலேயே ஒருவருக்குப் பிடித்த உணவு இன்னொருவருக்குப் பிடிக்காது. அதைப் போலவே தெய்வ உருவங்களிலும் சில தெய்வ உருவங்கள் சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதேதான் விரதத்திலும். அவரவர்கள் விருப்பத்திற்குத் தகுந்தபடியும், பழக்கத்திற்கு தகுந்தபடியும், குடும்ப வழக்கத்திற்கு தகுந்த படியும் விரதங்களை இருக்கின்றார்கள். சிலர் சில பலன்களை உத்தேசித்தும் விரதம் இருக்கின்றார்கள். கிருத்திகை விரதம் இருக்கக் கூடிய சிலர் சதுர்த்தி விரதம் இருப்பதில்லை. பிரதோஷ விரதம் இருப்பவர்கள் ஏகாதசி விரதம் இருக்க மாட்டார்கள். இரண்டும் சேர்ந்து இருப்பவர்களும் உண்டு. எனவே ஏதேனும் ஒரு சில நாள்களிலாவது இறைவனை நினைத்து விரதம் இருந்து பலனடையட்டும் என்பதற்காக இத்தனை விரதங்களை நம்முடைய முன்னோர்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
?சிவன் கோயில் நந்தியை தொடாமல் வணங்க வேண்டும். ஆனால் சிலர் நந்தியின் காதைப் பிடித்து வேண்டு தலைச் சொல்கிறார்கள். இது சரியானதா?
– கே.விஸ்வநாத்,பெங்களூர்.
முற்றிலும் தவறு. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது தவறுதான். அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக் கூடாது. சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நந்திக்கு முன்னால் பக்கவாட்டில் வந்து நின்று உள்ளே செல்வதற்கு அனுமதி வேண்டி நந்தி பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இறைவனுக்கும், நந்திக்கும் இடையே இறைவனை மறைக்கும் விதமாகச் சென்று நிற்கக்கூடாது. உங்கள் வேண்டுகோளையும், பிரார்த்தனைகளையும் நேரடியாக இறைவனிடமே முறையிடலாம். அதனை விடுத்து இறைவனை நோக்கித் தியானத்தில் அமர்ந்திருக்கும் நந்தியினைத் தொந்தரவு செய்யும் விதமாக அவரைத் தொடுவதும், அவரது காதுகளில் ரகசி யமான முறையில் வேண்டுகோளைச் சொல்கிறேன் பேர்வழி என்று நம் எச்சில் படும் விதமாக குறைகளைச் சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்று. பிரதோஷ காலத்தில் நந்தியின் சிரசினில் இறைவனின் திருநடனக் காட்சி தென்படுவதால் அந்த நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளைச் செய்கிறோம். அந்த நேரத்தில் சிவனடியார்களின் தலைவனாகிய நந்திக்குச் செய்யும் ஆராதனை அந்த ஆண்டவனுக்கே செய்யும் ஆராதனை என்பதால் சிறப்பு பெறுகிறது. அதனைத் தவறாகப் புரிந்துகொண்டு நந்தியின் காதுகளில் வேண்டுகோளைச் சொல்வது என்பது வீணானது மட்டுமல்ல, எதிர்மறையான பலன்களைத் தரும் பாபச் செயலும்கூட என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
?எல்லோரும் புரிந்துகொள்ளும் ஒரு மொழி இருக்கிறதா?
– கீதா, விழுப்புரம்.
ஏன் இல்லை? அந்த மொழிக்கு புன்னகை என்ற பெயர். அதை எல்லா மொழியினரும் புரிந்துகொள்ள முடியும். ஒரு சின்னக் குழந்தைகூட உங்கள் புன்னகையைப் புரிந்து கொண்டு, அதற்கு பதில் சொல்லும். எனவே இதைவிட சிறந்த மொழி வேறு இருக்க முடியாது.