மும்பை: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகன மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும். இத்துடன், இந்த ஆண்டில் 3வது முறையாக ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முடிவு செய்கிறது. இந்நிலையில், நடப்பு மாதத்துக்கான கூட்டம் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், முக்கிய முடிவாக, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் அரை சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு, வாகன மற்றும் தனி நபர் கடன்களுக்கான இஎம்ஐ குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி அரை சதவீதம் குறைத்து 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதம் ஆக்கப்பட்டுள்ளது. இதுபோல், வங்கிகளில் ரொக்க கையிருப்பு விகிதம் ஒரு சதவீதம் குறைத்து மூன்று சதவீதம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளில் ரூ.2.5 லட்சம் கோடி கையிருப்பு உபரியாக இருக்கும். கடந்த 6 மாதங்களில் பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது. மேலும், சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரமின்மை காணப்படுவதால், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த தற்போதைய கொள்கை முடிவுகள் உதவும் என எதிர்பார்க்கலாம்.
ஏனெனில், மக்களின் நுகர்வு மற்றும் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பாக அமையும். பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான போர் காரணமாக பொருளாதாரத்துக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. வங்கிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியர் அல்லாதோர் 15 சதவீதம் வரை பங்குகளை வாங்கலாம். இந்த உச்சவரம்பை மேலும் அதிகரிக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. ரெப்போ வட்டியை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவுதான். இவ்வாறு சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார். ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்புக்கு தொழில்துறையினர், நிபுணர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
* நகைக்கடன் தொடர்பான விதிகள் தளர்த்தப்படுகிறது
நகைக்கடன் வாங்குவதற்கு 9 கடுமையான நிபந்தனைகளுடன் வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டிருந்தது. நகைக்கடன் வாங்குவோர், அடமானம் வைக்கும் நகை தங்களுக்குச் சொந்தமானதுதான் என்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகள் இதில் அடங்கும். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, ரூ.2 லட்சம் வரை கடன் வாங்குவோருக்கு மேற்கண்ட நிபந்தனைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, விதிகளில் திருத்தம் செய்ய ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய நிதியமைச்சகம் உடனடியாக பரிந்துரை அனுப்பியது. இந்நிலையில், நகைக்கடன் தொடர்பாக திருத்தப்பட்ட வரைவு விதிகள் வெளியிடப்படும் . இதில், ரூ.2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு விதிகள் தளர்த்தப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார். இதன்மூலம், நகைக்கடன் விதிகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெப்போ குறைப்பால் வட்டி எவ்வளவு குறையும்?
(வீட்டுக்கடன் அடிப்படையில் தோராய கணக்கீடு)
தற்போதைய வட்டி வட்டி குறைப்பின்படி
கடன் தொகை ரூ. 50 லட்சம் ரூ. 50 லட்சம்
திருப்பிச் செலுத்தும் காலம் 240 மாதங்கள் 240 மாதங்கள்
வட்டி 8.00 சதவீதம் 7.50 சதவீதம்
தவணை ரூ.41,822 ரூ.40,280
திருப்பிச் செலுத்தும் தொகை ரூ. 1,00,37,280 ரூ.96,67,118
வட்டி ரூ.50,37,280 ரூ. 46,67,118
தவணை சேமிப்பு – ரூ. 1,542
வட்டி சேமிப்பு – ரூ. 3,70,162