*உறவினரிடம் துருவி துருவி விசாரணை
*சின்னசேலம் அருகே பரபரப்பு
சின்னசேலம் : சின்னசேலம் அருகே வீட்டில் தனியாக தூங்கிய பெண்ணை சரமாரியாக அரிவாளால் வெட்டி 8 பவுன் தாலி செயினை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தெங்கியாநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முனுசாமி (30). கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள காகித ஆலை நிறுவனத்தில் செக்கியூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவர் நெய்வேலியில் உள்ள உறவினர் பிரியங்கா(26) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். முனுசாமி இரவு பணிக்கு சென்றால் பிரியங்கா வீட்டில் தனியாக இருப்பார். இந்நிலையில் கடந்த 26ந்தேதி இரவு வழக்கம்போல முனுசாமி இரவு பணிக்கு சென்றார். பிரியங்கா வீட்டு தாழ்வார பகுதியில் தனியாக படுத்திருந்துள்ளார். அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் வீட்டின் முன்பு இருந்த மின்விளக்கை அணைத்துவிட்டு உள்ளே சென்று பிரியங்காவின் முகம், கழுத்து, இடுப்பு பகுதியில் சரமாரியாக அரிவாளால் வெட்டியதுடன், அவர் கழுத்தில் அணிந்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8.5 பவுன் தாலி செயினை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
படுகாயம் அடைந்த பிரியங்கா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். விடியற்காலை அந்த பகுதியில் வந்தவர்கள் வாசல் படிக்கட்டில் ரத்தம் வழிந்து தாழ்வாரத்தில் பிரியங்கா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததை பார்த்து முனுசாமிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கச்சிராயபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜித் சதுர்வேதி வந்து பார்வையிட்டு அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது டிஎஸ்பி தேவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் ராக்கி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த நாய் அருகில் இருந்த ஒரு வீட்டை சுற்றி சுற்றி வந்து படுத்துக்கொண்டதாக தெரிகிறது. அப்போது அந்த பகுதியில் ரத்தம் தோய்ந்த அரிவாளை போலீசார் கண்டெடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த பகுதியில் வசித்து வந்த உறவினர் ஒருவர் மற்றும் அந்த தெருவில் உள்ள சிலரை பிடித்து போலீசார் அழைத்து சென்று சந்தேகத்தின்பேரில் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதைப்போல கைரேகை நிபுணர் வந்து வீட்டின் சுவர்களில் இருந்த கைரேகைகளை ஆய்வு செய்தனர். மேலும் விழுப்புரத்தில் இருந்து தடய அறிவியல் நிபுணர்களும் வந்து சோதனை செய்தனர். பிரியங்கா சுயநினைவு இல்லாமல் இருப்பதால் அவரிடம் விசாரிக்க முடியவில்லை. சம்பவம் குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்னை அரிவாளால் வெட்டி தாலி செயினை பறித்து சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
தனிப்படை அமைத்து விசாரணை
சின்னசேலம் அருகே தெங்கியாநத்தம் கிராமத்தில் செக்கியூரிட்டி வேலை செய்து வரும் முனுசாமியின் மனைவி பிரயங்காவை அரிவாளால் வெட்டி தாலி செயினை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் ஒரு தனிப்படையும், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
சம்பவத்தை திசை திருப்பவே நகை திருட்டு
சின்னசேலம் அருகே தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்த முனுசாமியின் மனைவி பிரியங்காவை சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவத்தை பார்க்கும்போது இது நகைக்காக நடந்த சம்பவம் அல்ல என்று பொதுமக்கள், போலீசார் கருதுகின்றனர்.மேலும் பெண்ணின் காதில் நகை திருடுபோகாமல் அப்படியே உள்ளது. ஏதோ முன்விரோதம் காரணமாக அந்த ஊரை சேர்ந்த ஒருவர் இதை செய்திருக்க வேண்டும். அதை திசை திருப்பவே பிரியங்காவின் கழுத்தில் கிடந்த தாலி செயினை எடுத்து சென்றிருக்க வேண்டும் என தெரிகிறது. அதனால் போலீசார் இது சம்பந்தமாக இருவேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.