நியூயார்க்: பிரபல ஹாலிவுட் நடிகரான மைக்கேல் மேட்சன் (67), கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளை சந்தித்து வந்தார். கடந்த 2022ல் அவரது மகன் ஹட்சன் மேட்சன் தற்கொலை செய்துகொண்டார், தொடர்ந்து, கடந்தாண்டு தன் மனைவி டியானாவை விட்டும் பிரிந்தார். மேலும், குடும்ப வன்முறை புகாரின் பேரில் டியானா அளித்த புகாரில், மைக்கேல் மேட்சன் கைது செய்யப்பட்டார். இப்படி தொடர் போராட்டங்களால் சூழப்பட்டிருந்த அவரது வாழ்க்கை, தற்போது சோகத்தில் முடிந்துள்ளது. கலிபோர்னியாவின் மாலிபுவில் உள்ள தனது வீட்டில் மைக்கேல் மேட்சன் காலமானார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரீப் காவல் துறை, அவரது மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று உறுதி செய்துள்ளது. மேலும், மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்கேல் மேட்சனின் மரணம் ஹாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1980ம் ஆண்டுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், 1992ல் வெளியான இயக்குநர் க்வென்டின் டரான்டினோவின் ‘ரிசர்வாயர் டாக்ஸ்’ என்ற திரைப்படம் மூலம் மைக்கேல் மேட்சன் உலகப் புகழ் பெற்றார்.