சென்னை : தமிழக அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என தமிழக போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அக்டோபர் 23ம் தேதி அன்று ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை என்பதால் அக்டோபர் 20ம் தேதி முதல் அக்டோபர் 25ம் தேதி வரை பயணிகள் அடர்வு அதிகமாக இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டியுள்ளது. எனவே அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் தவறாமல் அவரவர் பணிக்கு வந்து பணி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கொண்ட நாட்களில் பணிக்கு வராதவர்களுக்கு வார விடுப்பு DO,CO,CL,EL,SL ஆகிய விடுப்புகள் வழங்க இயலாது.
அன்றைய நாட்களில் பணிக்கு வராதவர்களுக்கு ABSENT REPORT அனுப்பி சட்டப் பிரிவின் மூலம் தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் மேற்கண்ட நாட்களில் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வந்து ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.இதன்படி, தாம்பரம் ‘மெப்ஸ்’ பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி புறவழிச் சாலை (பணிமனை அருகே) மற்றும் கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.