பென்னாகரம்: ரீல்ஸ் மோகத்தால் ஒகேனக்கல்லில் தடை செய்யப்பட்ட பகுதிகளில், பாசி படர்ந்த பாறைகளின் மீது ஆபத்தான முறையில் நின்று, இளைஞர்கள் வீடியோ எடுத்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தின் புகழ்பெற்ற ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒரு சில பகுதிகளில் உயிர்ப்பலி வாங்கக்கூடிய சூழல் இருப்பதால், அப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள், பரிசல் பயணம் மேற்கொள்ளவும், சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதி கிடையாது. மேலும் ஒரு சில பகுதிகளில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரீல்ஸ் மற்றும் செல்பி மோகத்தால் பல இளைஞர்கள், தடையை மீறி தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் ஆபத்தான முறையில் சென்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்கின்றனர்.
அதுமட்டுமின்றி பாசி படர்ந்த வழுக்குப் பாறைகளில் நின்றும் அதிர்ச்சியூட்டும் வகையில் செல்பி எடுத்து வருகின்றனர். சமூக வலைதளத்தில் கிடைக்கும் லைக்குக்காக, தங்களது உயிரை பணயம் வைத்து, இத்தகைய விதி மீறல்களில் ஈடுபடும் பொழுது தவறி விழும் பட்சத்தில் உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளன. ஒரு சில தடை செய்யப்பட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடாததே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்று படுகைகளில் உள்ள பாறைகளின் மீது நின்று கொண்டு ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுக்கும் இளைஞர்களின் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.