மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து இன்று 3வது நாளாக 50ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து 45,500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் கடந்த 2 வாரங்களுக்கு முன் நிரம்பிய நிலையில், அணைகளுக்கு வரும் நீர்அளவை பொறுத்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இரு அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களாக 60 ஆயிரம் கனஅடி அளவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் இன்று 3வது நாளாக நீர்வரத்து 50ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அங்குள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.
இதேபோல் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 35,860 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவு வினாடிக்கு 51,401 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து 40,500 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,200கன அடி, உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 17,800கனஅடி என மொத்தமாக காவிரியில் 40,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இவை தவிர கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
நேற்று காலை அணையின் நீர்மட்டம் 119.72 அடியாக இருந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி மீண்டும் நிரம்பியது. இன்று 2வது நாளாக நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்சியாக உள்ளது. மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. விடுமுறை தினமான இன்று இதனை வேடிக்கை பார்க்க சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். இவர்கள் 16 கண் மதகு வழியாக தண்ணீர் பாய்ந்து செல்லும் அழகை கண்டு ரசித்தனர்.