சென்னை: சென்னையில் நடந்து வரும் ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பைக்கான அரை இறுதியில் இன்று, தமிழகம் – சண்டிகர் அணிகள் மோதவுள்ளன. சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் கடந்த 18ம் தேதி முதல் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 3வது காலிறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா – கர்நாடகா அணிகள் மோதின.
போட்டியின் துவக்கத்தில் சிறப்பாக ஆடிய கர்நாடகா அணியின் பரமேஷ், 15வது நிமிடத்தில் கோலடித்தார். அதன் பின் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை, மகாராஷ்டிரா வீரர் மஹாதிக் தனஞ்செய் சிறப்பாக பயன்படுத்தி கோலாக்கினார்.
பின், 39வது நிமிடத்தில் மகாராஷ்டிராவின் சந்தேஷ் கணேஷ் கோலடித்தார். அதன் பின் யாரும் கோல் போட முடியவில்லை. அதனால், 2-1 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. மற்றொரு காலிறுதியில் அரியானா – சண்டிகர் அணிகள் மோதின. இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டு சமனில் இருந்ததால், ஷூட்அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில், 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற சண்டிகர் அரை இறுதிக்குள் நுழைந்தது. இன்று நடக்கும் முதல் அரை இறுதிப் போட்டியில் தமிழகம் – சண்டிகர் அணிகள் மோதவுள்ளன. 2வது அரை இறுதியில் ஒடிசா – மகாராஷ்டிரா அணிகள் மோதும்.