சென்னை: தங்கம் விலை வரலாற்று சாதனை படைத்த நிலையில் நேற்று திடீரென சவரனுக்கு ரூ.280 குறைந்தது. இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் ஏற்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் அதிரடியாக உயர்ந்ததால், சில நாட்களுக்கு பிறகு பெயரளவுக்கு குறைவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.45,240க்கு விற்கப்பட்டது. 26ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,600க்கும் விற்கப்பட்டது. 27ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,640க்கு விற்கப்பட்டது.
தொடர்ந்து 28ம் தேதியும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,770க்கும், சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,160 என்று விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அதாவது, இதற்கு முன்னர் கடந்த மே 4ம் தேதி சவரன் ரூ.46,000க்கு விற்கப்பட்டது. இது தான் தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாக இருந்தது. இந்த சாதனையை 28ம் தேதி தங்கம் விலை உயர்வு முறியடித்தது. அதே நேரத்தில் தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 வரை உயர்ந்தது. தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் இந்த விலை உயர்வு நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் நேற்று தொடங்கியது. அதில் தங்கம் விலையில் திடீரென மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.5,735க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.45880க்கும் விற்கப்பட்டது. இந்த திடீர் விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.