Thursday, April 18, 2024
Home » கடந்த 33 மாத கால ஆட்சி வரலாற்று சாதனைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார்

கடந்த 33 மாத கால ஆட்சி வரலாற்று சாதனைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார்

by Ranjith

சென்னை: கடந்த 33 மாத கால ஆட்சியின் வரலாற்று சாதனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பட்டியலிட்டார். பேரவையில் நேற்று, ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: என் கையில் முதலமைச்சர் என்ற பொறுப்பு வந்து 33 மாதங்கள் ஆகிறது. இவை ‘முன்னேற்ற மாதங்கள்’ ‘சாதனை மாதங்கள்’.

* இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கை தருகிறது தமிழ்நாட்டின் பொருளாதார வளம். இது, திராவிட மாடல் ஆட்சியின் முதல் சாதனை.

* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் தமிழ்நாடு 2வது இடத்தில் இருக்கிறது. இது, இரண்டாவது சாதனை.

* ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24 விழுக்காடாக இருக்கும்போது தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது, மூன்றாவது சாதனை.

* இந்திய அளவில் பணவீக்கம் 6.65 விழுக்காடாக இருக்கும்போது, தமிழ்நாட்டில் அது 5.97 விழுக்காடாக குறைந்து உள்ளது. இது, 4வது சாதனை.

* ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இது, 5வது சாதனை.

* மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. இது, ஆறாவது சாதனை.

* தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3வது இடத்துக்கு உயர்த்தி உள்ளோம். இது, ஏழாவது சாதனை.

* கல்வியில் இரண்டாவது இடத்துக்குத் தமிழ்நாட்டை உயர்த்தியது எட்டாவது சாதனை.

* புத்தாக்க தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது ஒன்பதாவது சாதனை.

* இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, தங்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதாக சொல்லத் தொடங்கி இருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் பத்தாவது சாதனை. இந்த பத்து மட்டுமல்ல, இந்தியாவின் தென் மூலையில் ஒரு ஆட்சி நடக்கிறது; அதன் திட்டங்களை தெரிந்து வந்து நம் மாநிலத்தில் செயல்படுத்துங்கள் என்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்துச் செல்வதுதான் திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்று சாதனை.

இப்படி, இன்று முழுவதும் என்னால் பட்டியலிட்டு கொண்டே இருக்க முடியும், ஆனால், நேரம் போதாது. இந்த சாதனைகளுக்கு எல்லாம் மகுடம் சூட்டுவதுபோல் ஒரு சாதனை இருக்கிறது. அது தான் மிக மிக முக்கியமானது. நமது ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து வகையிலும் வளர்ந்து வருவதை பார்த்து நம் இன எதிரிகளுக்கு பொறாமையும் கோபமும் வருகிறது அல்லவா? அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் மாபெரும் சாதனை. ஆதிக்க குவியலை அகற்றுவதும், அடிமை பள்ளத்தை நிரப்புவதும் இவர்களது கோபத்துக்கு காரணம்.

அந்த கோபத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் காட்டுகிறார்கள். அரசியல் சட்டப்பதவியில் இருக்கும் ஆளுநரும் அதற்கு விதிவிலக்கல்ல. அதற்காக நாம் அமைதியாக இருக்க முடியாது. நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும், நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் நாளாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஒவ்வொரு முறை நான் கையெழுத்து போடும் போதும், இதனால் பயன்பெறப்போகும் லட்சக்கணக்கான மக்களின் முகங்களை பார்க்கிறேன். சில திட்டங்களின் பெயரை சொல்லி, இதன் மூலமாக எத்தனை லட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள் என்று எனது செயலாளர்களிடம் கேட்டேன். அவர்களின் பதில் எனக்கு மகிழ்ச்சி அளித்தது.

* மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’யாக ஒரு கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிர் பெறுகிறார்கள்.

* ‘விடியல்’ பேருந்து பயணத் திட்டம் மூலமாக 445 கோடி முறை பயணித்து பெண்கள் பயனடைந்து இருக்கிறார்கள்.

* ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தால் பயனடைந்தவர்கள் ஒரு கோடி பேர்.

* முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 16 லட்சம் பிள்ளைகள் வயிறார உணவு உண்கிறார்கள்.

* நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் 13 லட்சத்து 12 ஆயிரம் பேர்.

* கூட்டுறவு கடன் தள்ளுபடி பெற்றவர்கள் 1 லட்சம் பேர்.

* மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ‘புதுமைப் பெண்’ திட்டப்படி 2 ஆண்டுகளுக்கு, 4 லட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்.

* ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 2 ஆண்டுகளில், 28 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளார்கள்.

* ‘இல்லம் தேடி கல்வி திட்டத்தில்’ 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளி பிள்ளைகள் பயனடைந்திருக்கிறார்கள்.

* 62 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிய குடிநீர் இணைப்பை பெற்றுள்ளது.

* 2 லட்சம் உழவர்கள் புதிய மின் இணைப்பு பெற்றுள்ளார்கள்.

* உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 30 லட்சம் முதியோர் மாதந்தோறும் பெறுகிறார்கள்.

* உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 5 லட்சம் மாற்றுத்திறனாளிகள் மாதந்தோறும் பெறுகிறார்கள்.

* ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தால் பயனடைந்தவர்கள் 2 லட்சம் பேர்.

* ‘முதல்வரின் முகவரி திட்ட’த்தினால் பயனடைந்தவர்கள் 19 லட்சத்து 69 ஆயிரம் பேர்.

* 33 மாதங்களில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று 6,569 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை லட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கியுள்ளேன். இப்படி, தமிழ்நாட்டின் ஒவ்வொருவர் இல்லந்தோறும் உதவி செய்து வரும் ஆட்சிதான் திமுக ஆட்சி.. உயர்கல்வி பெற வரும் அரசு பள்ளி மாணவியர்க்கு உதவித்தொகை தருவதன் மூலமாக 34 விழுக்காடு மாணவிகள் அதிகமாக கல்லூரிகளை நோக்கி வந்துள்ளார்கள்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்பட்டு வருவதன் மூலமாக கர்ப்பக்கிரகத்தில் சமத்துவம் நுழையத் தொடங்கி விட்டது. பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, சமூக முன்னேற்றத்தையும் சேர்த்து கொடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

* எய்ம்ஸ் மருத்துவமனை சோகத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை
தமிழகத்தில் கடந்த 33 மாத காலத்தில் நடத்திய சாதனைகள் அனைத்தும் கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையில் சாதிக்கப்பட்டவை. மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை நான் அதிகம் விவரிக்க தேவையில்லை, விரும்பவுமில்லை. மாநில முதலமைச்சர்களே டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தும் அவலத்தை பார்க்கிறோம்.

நாம் இரண்டு பெரிய இயற்கை பேரிடர்களை சந்தித்தோம். அதற்குக்கூட நிவாரணத் தொகை தரவில்லை. 30-06-2022 முதல் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை நிறுத்தி விட்டார்கள். இதனால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு புதிய சிறப்பு திட்டங்களை தருவதில்லை. தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோகக் கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று முதல்வர் கூறினார்.

* தினகரன் பத்திரிகை பாராட்டு பதிவு செய்தார் முதல்வர்
சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதையும் உள்ளடக்கி ‘எல்லார்க்கும் எல்லாம்‘ என்ற ‘திராவிட மாடல்’ கொள்கையை உருவாக்கி, அதன் தடத்தில் திமுக ஆட்சியானது செயல்பட்டு வருகிறது.

அதனால்தான் இந்தியாவின் முன்னணி பத்திரிகைகள் மட்டுமல்ல, உலகளாவிய பத்திரிகைகளின் கவனத்தை ஈர்த்து அவர்களது பாராட்டை பெறும் அரசாக திமுக அரசு இயங்கி வருகிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை, ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை முதல் பக்கத்தில் பாராட்டி உள்ளது. மக்களைத் தேடி வரும் அரசு என்று பாராட்டியது ‘தினகரன்‘ பத்திரிகை. இப்படி முன்னணி பத்திரிகைகள் பாராட்டி இருக்கின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

You may also like

Leave a Comment

thirteen − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi