நெல்லை: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய கலை பண்பாட்டு பிரிவு நிர்வாகி தனது பாடல்களை சீமான் கட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமெனக்கோரி நெல்லை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தார்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் (எ) இசை வேந்தன் கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் 2010ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் மாநில கலை, பண்பாட்டு, இலக்கியப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்தேன். அப்போது ‘உயிராயுதம்’ என்ற தலைப்பில் 7 பாடல்களை இயற்றி, இசையமைத்தேன். இந்தப் பாடல்கள், அதே ஆண்டு சேலத்தில் நடந்த நாம் தமிழர் இயக்க மாநாட்டில் வெளியிடப்பட்டது.
நான் பெரியாரிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, ஈழத்தமிழர் பிரபாகரனை மையப்படுத்தி இந்தப் பாடல்களை எழுதினேன். ஆனால், தற்போது சீமான் ‘சங்கி என்றால் சக நண்பன்’ எனக்கூறி ஆர்எஸ்எஸ் இயக்கப் பாதையில் அரசியல் பயணத்தைத் தொடங்கியதால், நான் கட்சியில் இருந்து விலகினேன். கட்சியில் இருந்து விலகிய பின்னரும், நான் மெட்டமைத்து இசைத்த பாடல்களை நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும். எனது அனுமதியின்றி என்னுடைய பாடலை பயன்படுத்திய சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது பாடல்களைப் பயன்படுத்தியதற்காக எனக்கு இதுவரை எவ்வித ராயல்டி தொகையும் வழங்கவில்லை. நான்தான் அந்த பாடல்களை இயற்றினேன் என்பதை சீமான் பல மேடைகளில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். அந்த ஆதாரங்களை காவல் ஆணையரிடம் சமர்ப்பித்துள்ளேன்’ என்றார்.