சென்னை: சென்னை பாடி படவேட்டம்மன் கோயில் வளாகத்தில் தமிழ்நாட்டு கோயில்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்குவதற்காக முதற்கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் 2,000 பிளாஸ்க்குகளை அனுப்பி வைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இதன்பிறகு அமைச்சர் கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை 41 நாட்களும் மகர விளக்கு பூஜை 21 நாட்களும் நடைபெறுகின்றது.
சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கேரள அரசும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டும் செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி, இந்து சமய அறநிலையத்துறை, ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு உதவிடும் வகையில் தலைமையிடத்தில் 24 மணி நேரமும் செயல்படுகின்ற தகவல் மையத்தை அமைத்துள்ளது. இந்தாண்டுக்கான ஐயப்பன் மலர் வழிபாடு வருகின்ற 25ம் தேதி மயிலாப்பூரில் நடைபெற இருக்கிறது.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவிடும் வகையில் கடந்தாண்டு அங்கிருந்து வரப்பெற்ற கோரிக்கையின்படி 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தாண்டு முதற்கட்டமாக இன்றைய தினம் 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும், 2000 ஒரு லிட்டர் மில்டன் பிளாஸ்க்குகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோயில் யானை தொடர்பாக வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்தினை குறையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் அங்குள்ள சூழ்நிலையை சுட்டிக்காட்டியதாகத்தான் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். குறைகள் இருந்தால் நிச்சயமாக அவைகள் நிவர்த்தி செய்யப்படும்.
பாஜகவை சேர்ந்த எச்.ராஜா, அவர் எந்த நாட்டில் வசிக்கிறார் என்றே தெரியவில்லை.தமிழகத்தில் நடைபெறுகின்ற சூழ்நிலைகள் அவருக்கு தெரியாது. கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு 38 வருவாய் மாவட்டங்களுக்கும் தனி வட்டாட்சியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.10.50 கோடி ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.6,882 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட பணிகளை எச்.ராஜா மறைக்க முற்படுகிறார். இந்த ஆட்சியைப் பொறுத்தளவில் நில மீட்பு வேட்டை தொடர்ந்து நடைபெறும்.
திருக்கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடையினை படிப்படியாக செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அமைச்சர் கூறினார். பேட்டியின்போது, ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதரன், கூடுதல் ஆணையர் டாக்டர் சுகுமார், மாநகராட்சி மண்டலக் குழு தலைவர் வி.கே.மூர்த்தி, இணை ஆணையர்கள் ச. லட்சுமணன், பொ.ஜெயராமன், கோ.செ. மங்கையர்க்கரசி, இரா.வான்மதி, கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை உள்பட பலர் இருந்தனர்.