சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாநகர் வண்டியூரில் நாளை (22ம்தேதி) முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது. இதன் தயாரிப்பு பணிகள் முழுவதும் அரசியல் கண்ணோட்டத்துடன் அமைந்து இருக்கிறது. கடந்த ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை முன்னின்று, சர்வதேச முருக பக்தர்கள் மாநாடு நடத்தியது.
இந்நிலையில், இந்து முன்னணி முருக பக்தர்கள் மாநாடு நடத்த வேண்டியதன் அவசியம் என்ன? ராம ஜென்மபூமி, பாபர் மசூதி விவகாரத்தை பயன்படுத்தி, வட மாநிலங்களில் அரசியல் ஆதாயம் அடைந்தது போல, தமிழ்நாட்டில் ‘முருகனை’ பயன்படுத்தி அரசியல் களத்தில் ஆதாயம் தேடும் முயற்சியாகவே மதுரை முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. முருக பக்தர்களின் ஆன்மிக உணர்வை அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்தும் இந்து முன்னணியின் நடவடிக்கையை மக்கள் உறுதியாக நிராகரிக்க வேண்டும்.