சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இதுவரை 1600 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. நடைபாண்டில் ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கவும், இதற்காக கோயில் நிதியை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட சீர் வரிசைகள் வழங்கி கடந்த மூன்று ஆண்டுகளில் 1800 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவ்வாண்டும் 1000 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.70,000/- மதிப்பீல் சீர் வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்.
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்திடும் பொருட்டு, ஆண்டுதோறும் திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவச திருமணத்திற்கான செலவின தொகை ரூ.60,000/- த்தினை (4 கிராம் தங்கத்தாலி உட்பட) ரூ.70,000/- ஆக உயர்த்தி. ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 50 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 1000 இணைகளுக்கு உபயதாரர் நிதி கிடைக்கப் பெறாத பட்சத்தில் திருக்கோயில் நிதி மூலம் திருமணங்களை நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.