வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேட்டில் கேரளாவை சேர்ந்த யாசிர் என்பவர் பேக்கரியுடன் இணைந்த ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 7ம் தேதி இரவு இந்த கடைக்கு மது போதையில் வந்த அகில இந்திய இந்து மகா சபை மாவட்ட துணை செயலாளர் அருண் பாண்டியன், சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு அங்கேயே மட்டையாகி விட்டார். கடை ஊழியர் பஷீர் அவரை எழுப்ப முயன்றார்.
ஆத்திரமடைந்த அருண் பாண்டியன், அவரை தாக்கியதில் மண்டை உடைந்தது. மேலும் கடையையும் சூறையாடினார். இதுகுறித்த புகாரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் திடீரென அருண்பாண்டியன் தலைமறைவானார். இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று கரூர் பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த அருண் பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.