சென்னை: சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் தெற்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.வி.அருண் – சுஷ்மிதா மொகந்தி ஆகியோரின் திருமணம் மாதவரத்தில் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ முன்னிலையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: ஏ.வி.அருண் – சுஷ்மிதா மொகந்தி திருமணத்தை உங்கள் முன் நடத்தி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரின் சார்பாக மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் தலைவர் நமக்கு ஒரு இலக்கை கொடுத்துள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும். திமுக தலைவர் முதல்வர் தலைமையில் 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அனைத்து இளைஞர் அணி அமைப்பாளர்களும், அரசியல் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். இதற்கு திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்து செல்ல வேண்டும்.
தமிழகத்திற்கு வரவேண்டிய 2,100 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தர மறுத்துவிட்டது. காரணம் மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்காததால் நிதி தர மறுக்கிறார்கள். இந்தியை குறுக்கு வழியில் திணிக்க முயல்கிறார்கள். தமிழகத்தில் இந்தியை ஏற்கவில்லை என்றால், 5000 கோடி ரூபாய் தர மாட்டேன் என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டி பார்க்கிறார். ஆனால் நமது முதல்வர், 5 ஆயிரம் கோடி ரூபாய் அல்ல, 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும், நாங்கள் எந்த வகையிலும் இந்தியை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார். எந்த மொழிக்கு எதிராகவும் திமுக செயல்படாது. ஆனால் கல்வி நிதியை காரணம் காட்டி இந்தியை திணித்தால் ஒப்புக் கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு, சி.வி.கணேசன், ஆவடி சா.மு.நாசர், கோவி.செழியன், எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர், கே.பி.சங்கர், எபினேசர். எம்.கே.மோகன், சுந்தர், ஜோசப்சாமுவேல், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் எஸ்.ஜோயல், அப்துல் மாலிக் மற்றும் நிர்வாகிகள் குறிஞ்சி கணேசன், எம்.எஸ்.கே.ரமேஷ், துக்காராம், புழல் எம்.நாராயணன், தி.மு.தனியரசு, வை.ம.அருள்தாசன், ஏ.வி.ஆறுமுகம், கருணாகரன், தயாளன், அற்புதராஜ், ஆர்.டி.மதன்குமார், கே.பி.சுந்தரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மணமகன் ஏ.வி.ஆர்.அருண் சார்பில் திமுக இளைஞரணி வளர்ச்சி நிதிக்கு ரூ.1 லட்சம் காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.