புதுடெல்லி: அதானி குழுமத்துடன் செபி தலைவர் மாதபி புச்சிற்கு தொடர்பு இருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது. இதை தொடர்ந்து செபி தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டு நேற்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ், மூத்த தலைவர் சச்சின் பைலட், கன்ஹையா குமார், உதித் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தெலங்கானாவில் நடந்த போராட்டத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் கலந்து கொண்டார். மும்பையில் காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் தலைமையில் போராட்டம் நடந்தது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் காங்கிரஸ் மாநில தலைவர் அஜய் ராய் தலைமையில் ஏராளமான கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ராஜ்பவன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் மபி, அசாம், அரியானா, பஞ்சாப், கோவா, நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கர் உள்பட அனைத்து மாநில தலைநகரங்களிலும் காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள்.