புதுடெல்லி: வயநாட்டை போல் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலங்களில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அங்கு முப்படைகளும் களம் இறக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலம் வயநாட்டை போல் மேகவெடிப்பால் இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை. பாலங்கள், சாலைகள், வீடுகள், குடியிருப்பு பகுதிகள் அத்தனையும் மொத்தமாக வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மொத்தத்தில் இமயமலையில் பல இடங்கள் உருக்குலைந்து போய் உள்ளது. இதையடுத்து காணாமல் போனவர்களை மீட்க முப்படைகளும் அங்கு களம் இறக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதர்நாத் செல்லும் பக்தர்கள் பல இடங்களில் சாலை துண்டிப்பு, ஆற்று வெள்ளம் காரணமாக சிக்கித்தவிக்கிறார்கள். அவர்களை மீட்க இந்தியவிமானப்படையின் சினூக் மற்றும் எம்ஐ 17 ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இதுவரை 5 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.
புதன்கிழமை இரவு லிஞ்சோலிக்கு அருகிலுள்ள ஜங்கிள்சட்டியில் நிகழ்ந்த மேக வெடிப்பின் விளைவாக கேதார்நாத் செல்லும் மலைப்பாதை முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது. அந்த வழியாக கேதர்நாத் சென்ற பக்தர்கள் பிம்பலி பகுதியில் சிக்கிக்கொண்டனர். மேலும் கோரபரவ், லிஞ்சோலி, பாடி லிஞ்சோலி மற்றும் பிம்பலி ஆகிய இடங்களில் சாலை உருக்குலைந்து மேற்கொண்டு பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இமாச்சலில் குலுவில் உள்ள நிர்மந்த், சைன்ஜ், மலானா, மண்டியில் உள்ள பதார், சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் நடந்த மேகவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 8ஆக உயர்ந்து விட்டது.
இன்னும் 45 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளத்தால் 3 மாவட்டங்கள் முற்றிலும் உருக்குலைந்து போய்விட்டன. குலு மாவட்டத்தின் மணிகரன் பகுதியில் உள்ள மலானா மின் திட்டத்தில் 33 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காணாமல் போனவர்களைக் கண்டறிய டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிம்லா மற்றும் குலு மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.