சிம்லா: தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் இமாச்சலபிரதேச மாநிலம் முழுவதும் மேகவெடிப்பு, கனமழை, வௌ்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள பல ஆறுகளில் அபாய அளவை தாண்டி வௌ்ள நீர் ஓடுவதால் பல பகுதிகள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. இந்நிலையில் மண்டி மாவட்டத்தில் மட்டும் மேகவெடிப்பால் பலியானோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மாநில அவசர செயல்பாட்டு மையம் வௌியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் நேற்று முன்தினம்(ஜூலை 1) மட்டும் 11 மேகவெடிப்புகள், 4 முறை திடீர் வௌ்ளம், ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெரும்பாலானவை மண்டி மாவட்டத்தில் நடந்துள்ளது. மண்டியில் உள்ள கோஹாரில் 4, கார்சோக்கில் 3, தரம்பூரில் 2 மற்றும் துனாக்கில் ஒரு மேகவெடிப்பு பதிவாகி உள்ளது. சியாஞ்ச், கோஹார், துனாக், தார் ஜரோல், பாண்டீவ் ஷீல் ஆகிய இடங்களில் தலா ஒரு சடலம் மீட்கப்பட்டன. 34 பேர் மாயமாகி உள்ளனர் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.