சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் மேக வெடிப்பால் பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டை தொடர்ந்து வடஇந்தியாவின் சில மாநிலங்களிலும் மேக வெடிப்பு காரணமாக தீவிர கனமழை, நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இமாச்சலபிரதேசத்தில் கடந்த 31ம் தேதி நள்ளிரவு குலுவின் நிர்மந்த், சைன்ஜ், மலானா, மண்டியின் பதார் மற்றும் சிம்லாவின் ராம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட மேக வெடிப்பால் அதி கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் அங்குள்ள பல கிராமங்கள் முழுவதும் வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. ஒரு கிராமத்தில் ஒரேயொரு வீட்டை தவிர மற்ற வீடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டு விட்டன. வௌ்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போன 53 பேரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.