ஷிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடருக்கு மக்கள் இறைச்சி சாப்பிட்டதே காரணம் என்று ஐஐடி இயக்குனர் ஒருவர் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 மாதங்களாக அடிக்கடி நிகழ்ந்த மேகவெடிப்பு காரணமாக மழை, வெள்ளம், நிலச்சரிவு இமாச்சல பிரதேசத்தை புரட்டி போட்டது. இந்த இயற்கை பேரிடரால் பல கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மழை வெள்ளத்திற்கு 73 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் ஷிம்லாவில் நடைபெற்ற கருத்தரங்கில் மாணடி ஐஐடி-யின் இயக்குனர் லஷ்மித்தார் பெஹெரா பங்கேற்று பேசியனார்.
அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், மக்கள் இறைச்சியை சாப்பிடுவதால் நிலச்சரிவு, மேகவெடிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதாகவும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு மக்கள் இறைச்சி சாப்பிடுவதே காரணம் என்றும் கூறினார். நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று மாணவர்களை நோக்கி கேள்வி எழுப்பிய லக்ஷ்மித்தார் பெஹெரா இறைச்சி போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் இறைச்சியை இனிசாப்பிட மாட்டோம் என்று மாணவர்களை உறுதிமொழி எடுக்கவும் அவர் வலியுறுத்தினார். இதற்கு முன்பு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற மந்திரத்தை உச்சரித்து நண்பனின் வீட்டில் இருந்து தீய ஆவியை விரட்டியதாக அவர் பேசியது ஏற்கனவே சர்ச்சையான நிலையில், தற்போது இறைச்சி சாப்பிட்டால் பேரிடர் ஏற்படக்கூடும் என்று அறிவியலுக்கு மாறான கருத்தை அவர் கூறியுள்ளார். ஐஐடி இயக்குனரின் இத்தகைய பேச்சு தொடர்பான வீடியோ விவாதப்பொருளாக மாறியுள்ளது.