சிம்லா: இமாச்சலில் மீண்டும் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக ஒரே இரவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்துள்ளது. இமாச்சலில் ஜூலை 31ல் நடந்த மேகவெடிப்பு காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. 19 பேர் பலியானார்கள். 14 பேரை இன்னும் காணவில்லை. இந்தநிலையில் சிம்லா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக தேசிய நெடுஞ்சாலை 5 உட்பட 132 சாலைகள் சேதம் அடைந்துள்ளன. சிர்மூர் மற்றும் சம்பா மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ராம்பூரில் உள்ள தக்லோப்ச் பஞ்சாயத்தில் ஆப்பிள் தோட்டங்கள் சேதம் அடைந்துள்ளன. பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது.