சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் சமோசா மாயமான விவகாரத்தில், முதல்வர் சுக்குவுக்கு ஆன்லைனில் பாஜவினர் சமோசா ஆர்டர் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சலபிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கடந்த 21ம் தேதி சிஐடி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கும், பிற முக்கிய பிரமுகர்களுக்கும் தருவதற்காக சமோசா, கேக்குகள் வாங்கப்பட்டன. முதல்வருக்கு தருவதற்காக வாங்கப்பட்ட சமோசா, கேக்குகள் பாதுகாப்பு வீரர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிஐடி அலுவலகத்திலேயே சமோசா மாயமான விவகாரம் தொடர்பாக சிஐடி விசாரணைக்கு முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு உத்தரவிட்டதாக செய்திகள் வௌியாகின.
ஆனால் இதனை மறுத்த முதல்வர் சுக்கு, “முக்கிய பிரமுகர்களுக்கான உணவு பொருள் மாயமானது பற்றி விசாரணைக்கு உத்தரவிடவில்லை. அதிகாரிகளின் நடத்தை குறித்தே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்தார். இருப்பினும் இமாச்சலபிரதேச பா.ஜ இதை அரசியல் ஆக்கி வருகிறது. பாஜவை சேர்ந்த ஹமிர்பூர் ெதாகுதி எம்எல்ஏ ஆஷிஷ் சர்மா, முதல்வர் சுக்விந்தர் சுக்குவுக்கு தருவதற்காக ஆன்லைனில் 11 சமோசாக்களை ஆர்டர் செய்தார். மேலும் சமோசாவை கையில் ஏந்தியபடி பா.ஜவினர் போராட்டம் நடத்தினார்கள்.