ஹிமாச்சல்: இமாச்சல பிரதேசத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை வெளுத்து வாங்குவதால் மாநிலம் பெரும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகனமழை பெய்கிறது. அடுத்தடுத்து நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு, மேகவெடிப்பு என மாநிலம் இயற்கை பேரிடரை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக சோலன், குழு, சிம்லா போன்ற 147 மலை மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. அங்கு மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகள் உள்வாங்கி உள்ளன. எண்ணற்ற வீடுகள் சீட்டு கட்டுபோல் சரிந்துள்ளன.
இதனால் பலர் அச்சத்தில் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மலையில் சிக்கியும் இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி முதல் தற்போது வரை 227 பேர் உயிரிழந்திருக்கின்றனர். காணாமல் போன 38 பேரை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் ராணுவம் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுப்பட்டுள்ளனர். சம்பா மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபரின் உடலை உள்ளூர் மக்கள் மீட்டு கரை சேர்த்தனர்.
கின்னாவூரில் ஏற்பட்ட நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் கற்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் அவ்வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பாதிப்பு விவரங்களை ஒன்றிய அரசு அனுப்பியுள்ள மாநில முதலமைச்சர் சூக்விந்தர் சிங் விரைந்து நிவாரண நிதிகளை வழங்க கோரிக்கை வைத்திருக்கிறார்.