சென்னை: மலைவாழ் மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களும் ஐஐடியில் சேர்வது மகிழ்ச்சி அளிக்கிறது என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் அமைப்பு நடத்தும் பால்ஸ் PALS நிறுவனத்தின் 2025-26ம் ஆண்டுக்கான ஆண்டு விழா சென்னை ஐஐடியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி மற்றும் திருப்பதி ஐஐடி இயக்குனர் சத்யநாராயணா ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர். ஐஐடி புவனேஸ்வர், ஐஐடி தார்வார்ட், ஐஐடி ஹைதராபாத், ஐஐடி பாலக்காடு ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டனர். பால்ஸ் (PALS) அமைப்பில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கூறியதாவது: தற்பொழுது 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பால்ஸ் அமைப்பில் பங்கேற்றுள்ளன. மேலும் இதனை 100 கல்லூரிகள் வரையில் எண்ணிக்கையை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஐஐடி முன்னாள் மாணவர்கள் சமூகத்திற்கு செய்யும் தொண்டு என இதனை கூறலாம். சர்வதேச அளவிலான கியூஎஸ் ரேங்கில் இதுவரை 200க்கும் மேற்பட்ட எண்களில் இருந்தோம். இம்முறை 47 புள்ளிகள் அதிகமாக பெற்று 150வது இடத்தை பெற்றுள்ளோம். முதல் முறையாக 200 இடத்திற்குள் வந்துள்ளோம். கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கி தந்ததன் அடிப்படையில் இந்த இடத்தை பெற்றுள்ளோம். மாணவர்களுக்கான வேலை வாய்ப்பை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளோம்.
மலைவாழ் மாணவி ராஜேஸ்வரி சென்னை ஐஐடியில் இடம்பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் மாணவர் ஒருவரும் நேவல் ஆர்க்கிடெக்சர் (கடல்சார்ந்த படிப்பு) சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ராஜேஸ்வரிக்கு பாலக்காடு ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சென்னை ஐஐடியில் எந்த பிரிவில் சேர்ந்துள்ளார் என்பது தெரியவில்லை. முதல் பட்டதாரிகளும், குறிப்பாக மலைவாழ் மாணவர்கள், கிராமப்புற மாணவர்களும் சென்னை ஐஐடியில் சேர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.