குலசேகரம் : குமரி மலையோர பகுதிகளில் மழை பெய்து வருவதால் கோதையாறு அருவி, குற்றியாறு இரட்டை அருவி, திற்பரப்பு அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குமரி மாவட்டத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை பெய்யும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு சில நாட்கள் மட்டுமே சாரல் மழையாக பொழிந்து ஏமாற்றியது. இதனால் மாவட்டத்தில் பெரும் வறட்சி நிலவி வந்தது. ேமலும் மலைகளில் இருந்து வரும் நீரோடைகள், ஆறுகள் போன்றவையும் வறண்டதால், நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் நாளுக்குநாள் குறைந்து வந்தது.
பேச்சிப்பாறையை சுற்றியுள்ள சூழியல் சுற்றுலா தலங்களான கோதையாறு அருவி, குற்றியாறு இரட்டை அருவி போன்றவையும் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டன. இந்தநிலையில் கடந்த 2 வாரங்களாக மலை மற்றும் மலையோர பகுதிகளில் சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதையடுத்து வறண்டு காணப்பட்ட அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருவதால், கோதையாறு அருவி மற்றும் குற்றியாறு இரட்டை அருவிகளில் குளிக்க செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சாரல் மழையும், பசுமை போர்த்திய அடர்ந்த மரங்கள், காடுகள், பறவைகளின் ரீங்கார குரல்கள் என இயற்கை அழகு கொட்டி கிடக்கும் கோதையாறு பகுதியில், குளிர் பிரதேசத்தை நினைவு படுத்துவது போல இதமான சூழல் நிலவி வருவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதுபோல சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் கொட்டுகிறது. கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக, கோதையாற்றில் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் அருவியில் தண்ணீர் கொட்டுவது சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது.நேற்றுமுன்தினம் விடுமுறை நாள் என்பதால், திற்பரப்பு அருவியில் காலை முதல் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
மாலை வரை சுற்றுலா பயணிகள் வந்து நீராடி மகிழ்ந்தனர். நேற்று மழை இன்றி வெயில் கடுமையாக இருந்தது. ஆனால் திற்பரப்பு பகுதியில் மேகமூட்டத்துடன் வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. மேலும் வானம் மப்பும், மந்தாரமுமாக காணபட்டது. இது சுற்றுலா பயணிகளுக்கு உற்சாகத்தை அளித்தது.
திற்பரப்பு அருவியின் மேல்பகுதியில் உள்ள தடுப்பணையில் உல்லாச படகு சவாரி நடந்தது. இதற்காக, சுற்றுலா பயணிகள் பயணிகள் நீண்டநேரம் காத்திருந்து, படகுகளில் பயணித்து இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.