வருசநாடு : வருசநாடு அருகே மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பண்டாரவூத்து மலைகிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன கடந்த 60 ஆண்டு காலமாக இந்த கிராமத்திற்கு தார்ச்சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் கிராம பொதுமக்கள், பால்கறவை காரர்கள், பள்ளி மாணவ மாணவிகள் முதியவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுதும் ஆட்டோக்களில் செல்லும் பொழுதும் வண்டி வாகனங்களை ஜல்லிக் கற்களை பஞ்சராகி பதம் பார்த்து வருகிறது.
இதனால் குறிப்பிட்ட பணிகளுக்கு செல்லும்பொழுது இடையூறுகள் ஏற்பட்டு அடுத்த நாள் செல்லும் நிலை ஏற்படுகிறது, இது சம்பந்தமாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே விரைந்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சிங்கராஜபுரம் ஊராட்சி பண்டாரவூத்து கிராமவாசி தென்னரசன் கூறுகையில், ரேஷன் பொருட்கள் வாங்கிச் செல்வதற்கு சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிங்கராஜபுரம் கிராமத்தில் வாங்கிச் செல்வதில் மிகவும் சிரமமாக உள்ளது, மேலும் ஆட்டோக்களில் செல்ல வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் கொடுத்து பாதி தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது’’ என்றார்.
இதே போல் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் மற்றும் பசுமலைத்தேரியில் இருந்து பொன்னன்படுகை கிராமம் வரை சுமார் 5 கி.மீ நீளமுடைய சாலையின் இரண்டு புறமும் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை, கொட்டை முந்திரி உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வரும் பாதையில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பசுமலைத்தேரி முதல் பொன்னன்படுகை வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
ஆனால் இதில் சில பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் தார்சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பாதை குண்டும் குழியுமாக இருப்பதால் விவசாயிகள் விளை பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் விளை பொருட்களை தேனி, சின்னமனூர் உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைக்க கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.
எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதியில் நிறுத்தப்பட்டதால் சாலை பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் பொன்னன்படுகை ஊராட்சி கொங்கரவு கிராமத்திலிருந்து கடமலைக்குண்டு செல்லும் வழியிலும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதே போல் மயிலாடும்பாறை அருகே நரியூத்து கிராமத்திலிருந்து செங்குளம் மற்றும் மூலக்கடை கிராமம் வரை உள்ள இணைப்புச் சாலை மிகவும் ஜல்லிகற்கள் பெயர்ந்து சாலைகள் சிதிலமடைந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் விவசாயிகளும் பொதுமக்களும் தங்களுடைய விவசாய நிலத்திற்கு சென்று வர சிரமமடைகின்றனர். எனவே விரைவில் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விளைபொருட்களை கொண்டு செல்ல சிக்கல்
தற்போது சேதமடைந்த சாலையும் கனமழையால் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி பாதிப்படைந்துள்ளது. மேலும் இப்பகுதிகளில் விளைகின்றன தென்னை, கொட்டை முந்திரி, தட்டப்பயிறு, எலுமிச்சை, இலவம்பஞ்சு, தக்காளி கத்தரி, பீன்ஸ், உள்ளிட்ட அனைத்து விவசாய பொருட்களையும் தேனி, ஆண்டிபட்டி, உள்ளிட்ட சந்தைகளுக்கு கொண்டு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொருநாளும் விவசாயிகள் தங்களின் நிலங்களில் விளைகின்ற பொருட்களை பொருட்களை கொண்டு செல்லும் பொழுது மிகவும் சிக்கல் நிலவி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நரியூத்து கிராம கண்மாய் ஆயக்கட்டு விவசாய சங்க தலைவர் அங்கையா கூறுகையில், ‘‘இந்த சாலை சம்பந்தமாக பல கிராமசபை மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தற்போது மழை பெய்து சாலைகளில் வாகனங்கள் பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் இந்த சாலைகளை தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு விரைவில் இந்த தார்சாலை பணியை செய்வதற்கு முன் வர வேண்டும்’’என்றார்.