மதுரை: தென்காசியை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட்ரமணா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது சட்ட விரோதம். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தேசிய நெடுஞ்சாலைகள் ஒன்றிய அரசு பட்டியலில் உள்ளது.
சாலை பராமரிப்புக்காக ஏற்கனவே பல்வேறு வகைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, மாநிலங்களின் கீழுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக விசாரணைக்கு வந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தேசிய நெடுஞ்சாலை அமைப்பதின் நோக்கமே தடையற்ற போக்குவரத்திற்காகத் தான்.
மதுரை – சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும், சுங்கக்கட்டணம் செலுத்தி வாகனங்கள் கடந்து செல்வதற்கு பயண நேரத்தில் மொத்தம் அரை மணிநேரத்திற்கும் மேலாக வீணாகிறது. இதற்கு மாற்று வழி இல்லையா’’ என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஜூலை முதல் வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.