சென்னை: தமிழகத்தில் சீரான மின் வினியோகத்தை உறுதி செய்வதில், துணை மின் நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஒரு கட்டுப்பாட்டு அறையும், அதிக ஆற்றல் கொண்ட இரண்டு மின்மாற்றிகளும் நிறுவப்படும். இதன்மூலம் 15 மெகா வாட் மின்சாரத்தை கையாள முடியும். ஒரு 33/11 கிலோ வோல்ட் துணைமின் நிலையம் அமைக்க, 4,300 சதுர அடி தேவைப்படும். தற்போது சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் அங்கு துணைமின் நிலையங்கள் அமைக்க போதிய இடம் கிடைப்பதில்லை. இந்த பிரச்னைகளுக்கு தீர்வுகான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், சிறிய காம்பேக்ட் துணை மின் நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. சென்னையில், இரண்டு இடங்களில் இந்த வகை மின் நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: காம்பேக்ட் துணை மின் நிலையம் அமைக்க 2,400 சதுர அடி இடம் மட்டுமே தேவைப்படும். மேலும் தேவைக்கேற்ப ஏற்ப, 11 கி.வோ., 33 கி.வோ., முதல், 66 கி.வோ., வரை, பல்வேறு மின்னழுத்த நிலைகளில் செயல்படும் வகையில் வடிவமைக்கலாம். இவற்றை அதிநவீன டிஜிட்டல் அமைப்புகள் மூலமும் நிர்வகிக்க முடியும். இந்த பெட்டி, தொலைதொடர்பு கருவிகள் மூலம் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்படும். ஆளில்லாமல் தானியங்கி முறையில் இயங்கும். இந்த பெட்டியில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், தானியங்கி அலாரம் அமைப்புகள் அதிகாரிகளை எச்சரிக்கும். கட்டுப்பாட்டு அறையில் இருந்தே, பிரச்னை சரி செய்யப்படும். துணைமின் நிலையம் அமைக்கும் செலவும், ரூ.15 கோடியில் இருந்து, ரூ.10 கோடியாக குறையும். முதல் கட்டமாக, சென்னையில் இரு இடங்களில் காம்பேக்ட் துணைமின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.