அதிக மதிப்பெண் பெற செய்வதாக கூறி பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பூசாரி: போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
மதுரை: பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற செய்வதாக கூறி, மாணவியை கர்ப்பமாக்கியது தொடர்பாக கைதான பூசாரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தோஷம் கழிப்பதாக கூறி பூசாரி பல இளம்பெண்களின் வாழ்க்கையில் விளையாடியது தெரிய வந்துள்ளது. மதுரையை சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள், பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அவரை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றபோது 8 மாதம் கர்ப்பம் என தெரிய வந்தது.
இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார், மாணவியிடம் விசாரித்ததில், மதுரை கண்ணனேந்தல் பகுதியில் உள்ள ஒரு கோயிலின் பூசாரியான சசிக்குமார் (45) என்பவர், மாணவியிடம் பழகி, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற சிறப்பு பூஜை செய்வதாக கூறி, அவரை வரவழைத்து பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சசிக்குமாரை கைது செய்தனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ``பூசாரி சசிக்குமார் கண்ணனேந்தல் பகுதியில் உள்ள சிறிய கோயில்களுக்கு சென்று பூஜைகள் செய்வது வழக்கம். அப்போது, தோஷம் கழிப்பதற்காக பெற்றோர்களுடன் வரும் இளம்பெண்களிடம் வசீகரமாக பேசி, சிறப்பு பூஜை செய்தால் தோஷம் கழிந்துவிடும் என கூறி அவர்களை நம்ப வைத்துள்ளார். பூஜைகளில் பெண்களை தவிர யாரும் இருக்கக்கூடாது என்று கூறி பெற்றோர்களை வெளியே அனுப்பி விடுவாராம். பின்னர் சிறப்பு பூஜையில் தனியாக இருக்கும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வாராம். இந்த விவகாரத்தில் இளம்பெண்கள் அவமானம் கருதியும், அச்சத்தாலும் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாணவி கர்ப்பம் ஆனதால் பூசாரியின் லீலைகள் அம்பலமாகிவிட்டது’’ என்றனர்.


