சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுள் 9 மாணவ, மாணவியர்களுக்கு, கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும், அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை என்ற அய்யன் வள்ளுவரின் குறளுக்கேற்ப இம்மாணவர்களின் மேற்படிப்பிற்கு உதவிடும் வகையில் தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
* 2021-22 சட்டமன்ற கூட்டத் தொடரின்போது பேரவையில், தமிழ்நாடு முதல்வர் அவர்கள் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு இனி பாதுகாப்பான, கௌரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்து தருவதை இந்த அரசு உறுதி செய்யும் என்று அறிவித்ததுடன், இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்தும் அறிவித்தார்.
* மேலும், அவர்களின் நல்வாழ்வுக்காக 10,469 புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்தார். அவற்றில் 3000 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7469 வீடுகள் கட்டும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
* அதுமட்டுமின்றி முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் 14,316 நபர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குதல் போன்ற தமிழ்நாடு அரசின் அனைத்து நலத்திட்டங்களும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், இல்லம் தேடி கல்வி போன்ற அனைத்து கல்வி சார்ந்த திட்டங்களும் முகாம் வாழ் மாணவர்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
* அத்துடன், மாதாந்திர பணக்கொடையாக குடும்பத் தலைவருக்கு ரூ.1000/-, குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.750/-, குழந்தைகளுக்கு ரூ.300/- என்று இருந்ததை முறையே ரூ.1500/-, ரூ.1000/-, ரூ.500/- என்று உயர்த்தி வழங்கப்படுவதோடு, இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது.
* மேலும், ஆண்டுதோறும் இலவசமாக துணிமணிகள், ஐந்து எரிவாயு உருளைகளுக்கான மானியம் வழங்கப்படுவதுடன், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக சமையல் பாத்திரங்களும், போர்வைகளும் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களின் மூலம் 19,666 குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர்.
* திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றவுடன் முதன் முதலாக முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு 7,065 இலவச எரிவாயு இணைப்பும், 2404 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. முகாம் வாழ் மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், இடைநிற்றலை தவிர்க்கும் விதமாகவும் இளநிலை கலை, அறிவியல், வணிகம் மற்றும் பட்டயப்படிப்புகள் பயிலும் 1641 மாணவர்களுக்கு 2 கோடியே 11 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், இளநிலை பொறியியல் படிப்பு பயிலும் 185 மாணவர்களுக்கு 1 கோடியே 26 இலட்சத்து 18 ஆயிரத்து 667 ரூபாயும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
* இந்நிலையில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருந்து, 2024-25 ஆம் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பில் 937 மாணவர்களும், பதினொன்றாம் வகுப்பில் 827 மாணவர்களும் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 722 மாணவர்களும் பொதுத்தேர்வு எழுதியுள்ளனர், இவர்களில் பலர் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிகழ்வின் போது, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. சா. மு. நாசர், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ,ப, பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் திருமதி. ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் முனைவர் மா. வள்ளலார் இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.