டெல்லி: உயர் தூய்மை ஆல்கஹால் மீது இரட்டை வரி விதிப்பதில் நிர்வாக நடைமுறை சிக்கல் உள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தற்போது டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்று வருகிறது. கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ‘மொலாசஸ்’ மீதான ஜி.எஸ்.டி. வரி 28%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது கரும்பு விவசாயிகளுக்கு பலனளிக்கும் என்றும், அவர்களின் கடன் தொகையை விரைவாக செலுத்த உதவும் என்றும் அவர் கூறினார். சிறுதானிய மாவு உணவு தயாரிப்புகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 18%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்படுவதாக தெரிவித்தார். 52-வது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் சிறுதானிய -மாவு உணவு தயாரிப்பு வரி விகிதங்களில் குறைப்பு.
சிறுதானிய மாவு உணவு தயாரிப்பு ஜிஎஸ்டி விகிதத்தை குறைப்பதால் சத்தான உணவு பொருட்கள் மக்களை சென்றடையும் எனவும் அவர் தெரிவித்தார். சத்தான உணவு பொருட்களை நோக்கி பொதுமக்கள் கவனம் திரும்ப இந்த வரி குறைப்பு உதவும். அதே போல் தூய்மையான ஆல்கஹால் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களிடமே விடப்பட்டுள்ளதாகவும், தொழில்துறை உபயோகத்திற்கான தூய்மையான ஆல்கஹால் மீது 18% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்நிலையில் உயர் தூய்மை ஆல்கஹால் மீது இரட்டை வரி விதிப்பதில் நிர்வாக நடைமுறை சிக்கல் உள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உயர் தூய்மை ஆல்கஹாலை அதிகம் இறக்குமதி செய்யும் மாநிலமான தமிழகத்திற்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும். சிறுதானிய பொருள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கும் பரிந்துரைகளை தமிழகம் ஏற்றுக் கொள்கிறது. சிறுதானிய பொருள் நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் முடிவை ஏற்கிறோம்.