Wednesday, June 18, 2025
Home செய்திகள்Banner News திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது: எடப்பாடிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி

திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது: எடப்பாடிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி

by Suresh

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் பேராதரவுடன் மே 2021 இல் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற உடன் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையினை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பல அரிய திட்டங்களின் மூலம் விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளார். திராவிட மாடல் அரசின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு இதுவரையில் ஐந்து வேளாண் நிதிநிலை அறிக்கையின் மூலம் ரூபாய் 1,94,076/- கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு உழவர்கள் நலன் காக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் முன்னெடுப்புகளால் முந்தைய ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் 2012 2013 முதல் 2020 2021 வரை சராசரியாக 1.36% இருந்த வேளாண் வளர்ச்சி 2021 முதல் 2024 வரை சராசரியாக 5.66 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்தது.

மே 2021 இல் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றவுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் ஒரு தோட்டக்கலை கல்லூரியும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், கரூர் மாவட்டத்தில் கரூர், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஆகிய இடங்களில் தலா ஒரு வேளாண்மை கல்லூரியும் அமைக்க உத்தரவிடப்பட்டு அவ்வாறே 2021-22 ஆம் ஆண்டிலிருந்து மாணவர்கள் சேர்க்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவை ஏற்கனவே உள்ள கட்டிடங்களில் சிறப்பாக இயங்கி வருகின்றன.

வேளாண்மை, தோட்டக்கலை கல்லூரிகள் அமைக்க இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (Indian Council of Agricultural Research ICAR) தர நிர்ணயத்தின்படி குறைந்தபட்சம் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடங்களை தேர்வு செய்யும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் உள்ள மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திலேயே செட்டிநாடு வேளாண்மை கல்லூரிக்கு என இடம் தேர்வு செய்யப்பட்டது. நபார்டு வங்கியின் நிதி உதவி மூலம் ரூபாய் 61.79 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன விரைவில் கல்லூரிக்கான கட்டடம் முதலமைச்சர் அவர்களால் மாணவர்கள் பயன்பாட்டிற்கென வெகுவிரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூரில் தோட்டக்கலை கல்லூரி அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ரூபாய் 70.18 கோடிக்கணப் பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு இதுவரை சுமார் 35 சதவீத பணிகள் முடிவடைந்து தொடர்ந்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ் வேளூரில் வடக்குவெளி கிராமத்தில் 40 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. உரிய அரசாணை பெறப்பட்டு கட்டமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் வட்டம், மணவாசி வருவாய் கிராமத்தில் வேளாண்மை கல்லூரிக்கு என 40 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு கல்லூரிக்கு தேவையான கட்டிடங்கள் கட்ட ரூ.76.62 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த நான்கு ஆண்டுகளில் இக்கல்லூரிகளில் இதுவரை 1013 மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர். படிப்பிற்கு எந்தவித இடையூறும் இன்றி அனைத்து அடிப்படை வசதிகளும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ளன. மேலும் 2021 இல் திராவிட முன்னேற்ற கழக திராவிட மாடல் அரசினால் தமிழ்நாடானது உயர்கல்வியினை மாணவர்களுக்கு வழங்குவதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாணவர்கள் தங்கு தடையின்றி கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்கள் அடிப்படை வாழ்வாதாரம் சிறப்பாக திகழ்கின்றது.

இவ்வாறு இருக்கையில் புதிய வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று எதிர்க்கட்சியின் குறிப்பாக அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சிறப்பாக ஆட்சி செய்து வரும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் மீது குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் எதிர்க்கட்சி தலைவர். அவருடைய குற்றச்சாட்டு அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மட்டுமே இருக்குமே இன்றி வேறு எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi