சென்னை: உயர் கல்வியில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 50 சதவிகிதமாக உயர வேண்டும் என விஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் வேந்தர் விசுவநாதன் கூறினார்.விஐடி சென்னையில் பட்டமளிப்பு விழா மற்றும் புதிய கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு விஐடி பல்கலைகழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், நிர்வாக இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி மற்றும் உதவி துணைத்தலைவர் காதம்பரி விசுவநாதன் முன்னிலை வகித்தனர்.
விஐடி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, கவுரவ விருந்தினராக எல்டிஐ மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி சேதனா பட்நாயக் கலந்து கொண்டனர். விழாவில், 38 மாணவ, மாணவிகளுக்கு தங்க பதக்கங்கள் உள்பட இளங்கலையில் 2,144, முதுகலையில் 817, ஆராய்ச்சி மாணவர்கள் 95 என மொத்தம் 3056 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.
விழாவில், ஒன்றிய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி பேசுகையில், ‘‘ நாம் வேலை செய்பவர்களாக இருப்பதை விட வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். மாற்றம் மற்றும் புதுமைக்கான தீபம் ஏற்றுபவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும்‘‘ என்றார்.விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது: இந்தியாவின் 145 கோடி மக்கள் தொகையில் 10 சதவிகிதம் மட்டுமே பட்டதாரிகள். உயர் கல்வியில் மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் 27 சதவிகிதம் மட்டுமே.
அது 50 சதவிகிதம் ஆக உயர வேண்டும். உண்மையான சுதந்திரம் கல்வி வாயிலாக மட்டுமே கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். விஐடி சென்னையின் இணை துணைவேந்தர் டி.தியாகராஜன், விஐடி வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாகராஜன், விஐடி வேலூர் இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மாலிக், விஐடி பதிவாளர் டி.ஜெயபாரதி, கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.