சென்னை: புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தொடர்ந்து உயர்க்கல்விச் செல்லும் மூன்றாம் பாலின மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், மூன்றாம் பாலினத்தவர்கள் நல்வாழ்விற்கான பல திட்டங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அவர்களது சமூகப் பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்து வாழ்வில் வெற்றி பெற உயர்கல்வி கற்பது இன்றியமையாதது ஆகும். புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவு படுத்தப்படும். மூன்றால் பாலினத்தவருக்கு போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் உரிய பயிற்சிகள் வழங்கி ஊர்க்காவல் பணியில் ஈடுபத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஊர்க்காவல் படையினருக்கு இணையாக ஊதியம், பயிற்சி, சீருடை வழங்கப்படும் என்று கூறினார்.