சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் ரூ.120.54 கோடியில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம், புலியகுளம் – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.12 கோடியே 90 லட்சத்து 37 ஆயிரம் செலவிலும், கரூர் மாவட்டம், தரகம்பட்டி – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ராமேஸ்வரம் – பாரத ரத்னா டாக்டர் ஏ.பி. ஜெ. அப்துல்கலாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தலா ரூ. 12 கோடியே 46 லட்சம் செலவிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம், புத்தூர் – ஸ்ரீனிவாசா சுப்பராயா பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ. 4 கோடியே 59 லட்சம் செலவில் 9 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 5 ஆய்வகக் கட்டிடங்கள், பர்கூர் – அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 4 கோடி செலவில் 8 கூடுதல் வகுப்பறைகள், கழிவறைத் தொகுதி மற்றும் 2 ஆய்வகக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தர்மபுரி – அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2வது மற்றும் 3வது தளங்களில் ரூ. 2 கோடியே 68 லட்சம் செலவில் வகுப்பறை, ஆய்வகம் மற்றும் கழிவறை தொகுதிக்கான கட்டிடங்கள்கட்டப்பட்டுள்ளன.
மொத்தம் ரூ.120 கோடியே 54 லட்சம் 17 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், உயர்கல்வித் துறை செயலாளர் சமயமூர்த்தி, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் இன்னசன்ட் திவ்யா, கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.