இந்தியா மற்றும் வெளிநாடுகளில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்கச் சென்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகளை பாராட்டும் விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆண்டில் இந்தியாவில் உள்ள முதன்மைக் கல்வி நிறுவனங்களில் 447 மாணவ-மாணவிகளும், வெளிநாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் 14 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 461 பேர் உயர்கல்வி படிக்கச் செல்கின்றனர். அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை, விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி பேசும்போது,உலகின் அறிவுச்சொத்துகளான இந்த மாணவர்களைப் பார்க்கும்போது எனக்கு உள்ளபடி பெருமையாக இருக்கிறது. 2022-ம் ஆண்டு 75 மாணவர்கள். 2023-ம் ஆண்டு 274-ஆக ஆனது.
இந்த ஆண்டு, அது மேலும் இரண்டு மடங்காகி, 447 மாணவர்கள் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னமும் பல நிறுவனங்களில் சேர்க்கை நடத்தி முடிக்கவில்லை. அதனால், இந்த எண்ணிக்கை இன்னும் தினமும் அதிகரிக்கும். உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. நம்முடைய மாணவர்கள் இன்றைக்கு நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கப்போகிறார்கள். முதன்மை உயர்கல்வி நிறுவனங்கள் என்றால் ஐஐடி, என்ஐடி மட்டுமல்ல, தேசிய சட்டப்பல்கலைக்கழகங்கள், விண்வெளி ஆராய்ச்சித்துறை என்று அனைத்துத் துறைகளிலும் முதன்மையாக விளங்குகின்ற உயர்கல்வி நிறுவனங்களில் நம்முடைய மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்கின்ற மாணவர்களுடைய கல்விச் செலவையும், வெளிநாடுகளில் படிக்கச்செல்லும் பயணச்செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்று முதல்வர் தெரிவித்தார்.