சென்னை: மதுரையில் 2 இடங்களில் அதிமுக கொடிக் கம்பங்களை அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ‘தமிழகம் முழுவதும் ஏப்ரல் 28க்குள் அனைத்து பொது இடங்கள், மாநில, தேசிய சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் முகிலன் ஆஜராகி, இதுதொடர்பாக நிலையான வழிகாட்டு முறை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பொது இடங்களில் கட்சி கூட்டங்கள் மற்றும் கொடிகம்பங்கள் அமைப்பதற்கு கட்டணம் வசூலிக்கிறீர்களா?. ஒவ்வொரு கொடி கம்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கட்சி பொதுக்கூட்டங்கள், கொடிக் கம்பங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.