மதுரை: முறைகேடு குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததால் டாஸ்மாக் ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. மதுரையைச் சேர்ந்த மாயக்கண்ணன், முருகன், ராமசாமி ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளராக பணியாற்றுகிறோம். டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்று வரும் பிரச்னைகள் குறித்து புகார் அளித்தோம். ஊடகங்களிலும் பேட்டி அளித்தோம்.
அதனால், எங்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டார். இது சட்டவிரோதம். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ‘‘மனுதாரர்கள் மீது டாஸ்மாக் நிறுவன விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்க அனுமதி உள்ளது என்றாலும், மனுதாரர்கள் மீது ஏற்கனவே எடுத்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.