புதுடெல்லி: டெல்லியில் தமிழர்கள் குடியிருப்பு பகுதியை உயர் நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் இடித்ததால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். டெல்லி ஜங்புரா பகுதியின் மதராசி குடியிருப்பில் இருக்கும் தமிழர்களின் குடியிருப்புகளை இடித்து மக்களை வெளியேற்ற பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த பகுதியில் 700க்கும் மேலான குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். மேலும் அரசின் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அப்பகுதி தமிழர்கள் பல்வேறு விதமாக போராட்டத்தை மேற்கொண்டனர். ஜங்புரா பகுதியில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மதராசி குடியிருப்பை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து டெல்லி தலைமை செயலகத்தை கடந்த மாதம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இவர்களுக்காக வழங்கப்பட்ட மாற்று இடம் 40 கிமீ தொலைவில் உள்ளதால் பள்ளி குழந்தைகளின் கல்வி பாதிக்கும், பணிக்கு செய்பவர்கள் தங்கள் வேலை இழக்க நேரிடும் என்பதால், ஜங்புராவின் மதராசி குடியிருப்பை அகற்றும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் டெல்லி ஜங்க்புரா பகுதியில் இருக்கும் தமிழர்கள் வாழும் மதராசி கேம்ப் இன்று காலை டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இடிக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.