சென்னை: சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சாமிதுரை நேற்று காலமானார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள பாலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிபதி சாமிதுரை. மனைவி பெயர் டாக்டர் நித்யகல்யாணி. நீதிபதி சாமிதுரை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் சென்னை சட்ட கல்லூரியில் சட்ட படிப்பையும் முடித்தவர். 1955 முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1990 முதல் 94 வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். 1997 முதல் 2001 வரை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இருந்தார்.
திமுக அறிவித்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையில் சாமிதுரையும் ஒருவராக இடம் பெற்றார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் மணிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி பின்னர் கேரள உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். நீதிபதி சாமிதுரை கடந்த 2009 விழுப்புரம் தொகுதியில் வி.சி.க சார்பில் போட்டியிட்டார். இந்நிலையில், உடல் நிலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நீதிபதி சாமிதுரை நேற்று காலமானார். அவரது மறைவுக்கு மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
* முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை (வயது 91) மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். முதன்முறை உயர் நீதிமன்ற நீதிபதி ஆகும் வாய்ப்பு வந்தபோது அதனை மறுத்தஅரிய மனிதர். பின்னர் இரண்டாம் முறை வாய்ப்பு வந்தபோதுதான் மரபு கருதி அதனை ஏற்றுக்கொண்டார். 2018ம் ஆண்டு தலைவர் கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலைஞரின் புரட்சிகரமான பங்களிப்புகளை அவர் பட்டியலிட்டதும், அப்போதே என் மீது மிகுந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டு, ‘வருங்கால முதலமைச்சர்’ என அழைத்ததும் என் நெஞ்சில் நீங்காமல் நிழலாடுகிறது. ஜஸ்டிஸ் சாமிதுரையை இழந்து வாடும் அவரது கொள்கை வழித்தோன்றல் கேரள உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி – கேரள மனித உரிமை ஆணையத்தின் தற்போதைய தலைவர் ஜஸ்டிஸ் எஸ்.மணிக்குமார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.