சென்னை: டாஸ்மாக் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு அமலாக்கத்துறை பணிந்தது. ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதற்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது; டாஸ்மாக் வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக நீங்கள் கூறிய வாதத்திற்கும் கொடுத்திருக்கும் ஆவணங்களுக்கும் தொடர்பு இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடுகளுக்கு ED சீல் வைக்க என்ன அதிகாரம் உள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சீல் அகற்றப்படும், ஒட்டப்பட்ட நோட்டீசையும் எடுத்துவிடுகிறோம் என அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் பதிலளித்தார். மேலும் அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்ட நிலையில், பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வீடு, அலுவலகங்கள் பூட்டியிருந்தால் சீல் வைக்க தங்களுக்கு அதிகாரமில்லை என ED ஒப்புக்கொண்டது. சீல் வைத்த நோட்டீசை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடுகளில் பறிமுதல் செய்த பொருட்களை திருப்பித் தர ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து இடைக்கால மனு மீதான தீர்ப்பை 4 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.